புதன், 19 ஆகஸ்ட், 2026

"கேட்டை லாவகமாகத் திறந்து ஹவுஸ் விசிட் அடித்த யானை" ; கோவையில் அடுத்தடுத்து வெளிவரும் தடாகம் காட்டு யானையின் சி.சி.டி.வி!

SHARE

 "கேட்டை லாவகமாகத் திறந்து ஹவுஸ் விசிட் அடித்த யானை" ; கோவையில் அடுத்தடுத்து வெளிவரும் தடாகம் காட்டு யானையின் சி.சி.டி.வி!

ஹோட்டல் சட்டர் உடைப்பு, பசு மாடு தாக்குதல் முயற்சியைத் தொடர்ந்து வீடுகளுக்குள் 'நோட்டம்': பொதுமக்கள் உஷாராக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்!

 கோவை, தடாகம் பகுதியில் நள்ளிரவில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் இரும்பு கேட்டுகளை லாவகமாகத் திறந்து உள்ளே சென்று பார்வையிட்டு வரும் திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை உறைய வைத்து உள்ளது.

கோவை, தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களாகவே 'ஒற்றை காட்டு யானை' ஒன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் புகுந்த இந்த யானை, அங்கு இருந்த ஒரு ஹோட்டல் கடையின் சட்டரைத் தட்டிச் சேதப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் நகர் மற்றும் குன்று பெருமாள் கோவில் பகுதியில் உலா வந்த போது, தெருவில் நின்று இருந்த பசுமாட்டைக் கோபத்துடன் தாக்க முயன்றது.

இந்நிலையில், அந்த யானையின் மற்றொரு திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

 திருவள்ளுவர் நகர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அந்த காட்டு யானை, அங்கு இருந்த இரண்டு வீடுகளின் வெளிப்புறப் பூட்டப்படாத இரும்பு கேட்டுகளைத் தனது தும்பிக்கையால் மிக லாவகமாகத் தள்ளித் திறந்து உள்ளே சென்று உள்ளது.

வீட்டு முன்றிலில் நின்று சிறிது நேரம் நோட்டமிட்ட யானை, பின்னர் அமைதியாக வெளியேறியது. வீடுகளின் கேட்டுகளை மனிதர்களைப் போல அசால்ட்டாகத் திறந்து உள்ளே செல்லும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

யானை நாளுக்கு நாள் தனது எல்லைகளை விரிவுபடுத்தி வீடுகளுக்கு உள்ளேயே நுழையத் தொடங்கி உள்ளதால் தடாகம் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், வீட்டின் வெளிக்கேட்டுகளைப் பத்திரமாகப் பூட்டி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ஒற்றைக் காட்டு யானையைக் உடனடியாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனத் தடாகம் பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: