"எத்தனை தடவை மனு குடுக்குறது ?" - கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்!
சாரமேடு தெருநாய் தொல்லை, உக்கடம் படகு இல்லம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வினோத போராட்டம்!
கோவை மாநகராட்சி நிர்வாகம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மண்டியிட்டபடி சென்று மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான சாரமேடு பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் மாநகரின் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது,
சாரமேடு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, மதரசாக்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உக்கடம், பைபாஸ் சாலையில் அமைந்து உள்ள படகு இல்லத்தைக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க வேண்டும்.
உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் செல்லும் சாலையில், புதிய மேம்பாலம் இறங்கும் பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.
கரும்புக்கடை பகுதியில் போதிய குப்பைத்தொட்டி வசதிகள் இல்லாததால், உடனடியாகப் புதிய குப்பைத்தொட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டியிட்டுச் சென்று மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர், மாநகராட்சி ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மண்டியிட்டவாறே சென்று அதிகாரிகளிடம் மனு அளித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

0 கருத்துகள்: