கோவையில் முதியவர் கட்டையால் அடித்துக் கொலை... ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5-வது ரத்தக் களறியால் உறைந்த மாநகரம்!
சிங்காநல்லூரில் அழுகிய நிலையில் உடல் மீட்பு; தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர் சிவாவை வலைவீசித் தேடும் 3 தனிப்படைகள்!
கோவை, சிங்காநல்லூர் தேவேந்திரகுல வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்து உள்ளார். இதனிடையே வேலுச்சாமி வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, பலத்த காயங்களுடன் வேலுச்சாமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்து உள்ளார். தொடர்ந்து சடலத்தை மீட்ட சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். வேலுசாமி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருந்த நிலையில், இதுகுறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னதாக வேலுசாமி இரண்டு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில்,கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என கூறப்படுகிறது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வேலுசாமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிவா என்பவர் மாயமானது தெரியவந்து உள்ளது. இதையடுத்து போலீசார் தலைமறைவாகியுள்ள அந்த நபரை தேடி வருகின்றனர். கோவையில் ஆகஸ்ட் மாதம் துவங்கியது முதல் பீளமேடு பகுதியில் நவீன் என்பவரும், கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்பவரும், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டு இருந்தனர். மேலும் இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதனும் சக மாணவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த மாதத்தில் ஐந்தாவது கொலையாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது கோவை மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.......

0 கருத்துகள்: