திங்கள், 7 செப்டம்பர், 2026

"தலையில் கல்லை போட்டு கொடூரக் கொலை" ; சூலூர் அருகே முட்காட்டில் வாலிபர் நிர்வாணச் சடலமாக மீட்பு : கோவையில் பரபரப்பு!

SHARE

கோவை சூலூரில் துணிச்சல் சம்பவம் : கொலையாளி யார் ? சூலூர் போலீசார் தீவிர விசாரணை!

 கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில், முட்காட்டிற்குள் உள்ள தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டுக் கொடூரமான முறையில் நிர்வாணமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் 'நந்தினி நகர்' என்ற மனைப் பிரிவு பகுதி அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு இருந்த இந்தப் பகுதியில் எந்தக் கட்டிடங்களும் கட்டப்படாமல், அடர்த்தியான முட்காடாக மாறி உள்ளது.

​இந்தப் பகுதியில் சிங்காநல்லூரைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அவர் அந்த இடத்தில் புதிதாகத் தகரக் கொட்டகை அமைக்கும் பணியைத் தொடங்கி, ஆரம்பக்கட்ட வேலைகளைச் செய்து வருகிறார். 

குருநாதன் வாரம் ஒருமுறை நேரில் வந்து தனது இடத்தை நேரில் பார்வையிட்டுச் செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில், வழக்கம் போல இன்று (செப்டம்பர் 7) காலை குருநாதன் தனது இடத்தை ஆய்வு செய்வதற்காக வந்து உள்ளார். அப்போது, தான் புதிதாக அமைத்து வரும் தகரக் கொட்டகையின் உள்ளே வாலிபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, ஆடை ஏதும் இன்றி நிர்வாண நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

​அவரது தலையில் பெரிய கல்லை தூக்கிப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்துக் குருநாதன் உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுச் சம்பவ இடத்தில் தீவிரத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

​கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எதற்காக இந்த ஆள்நடமாட்டமற்ற முட்காட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார், தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா ? என பல்வேறு கோணங்களில் சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​ஆள்நடமாட்டமில்லாத முட்காட்டில் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோவை சூலூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: