திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? புதூர் போலீசார் தீவிர விசாரணை - கேரளா மற்றும் தமிழகத்தில் பரவும் அதிர்ச்சி!
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது.
அட்டப்பாடி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீரக்கடவு பகுதியில், நேற்று (செப்டம்பர் 6) பவானி ஆற்றில் சில சாக்கு மூட்டைகள் மிதப்பதை அப்பகுதி மக்கள் கவனித்து உள்ளனர். அந்தச் சாக்குகளில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனடியாகப் புதூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதூர் போலீசார் சாக்கு மூட்டைகளைக் கைப்பற்றிச் சோதனையிட்டனர். அப்போது, அதில் மனித உடல் பாகங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு சாக்கு மூட்டையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண் மற்றும் சுமார் 5 வயது மதிக்கத்தக்கச் சிறுமியின் தலைகள் இருந்தன.
மற்றொரு சாக்கில் அந்த 5 வயது சிறுமியின் உடற்பகுதி இருந்தது.
சம்பவ இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் மிதந்து வந்த வேறொரு சாக்கில் அந்தப் பெண்ணின் உடற்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
இருவரும் உயிரிழந்து சுமார் 4 முதல் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நீரில் நீண்ட நாட்கள் கிடந்ததால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்படுவதால், உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
உடல் பாகங்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு வெவ்வேறு சாக்கு மூட்டைகளில் அடைத்து வீசப்பட்டு உள்ளதால், இது ஏதேனும் ஒரு இடத்தில் வைத்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரக் கொலையாக இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் பகுதியில் வைத்து இருவரையும் கொடூரமாகக் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிச் சாக்கில் அடைத்துப் பவானி ஆற்றில் வீசிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
உயிரிழந்தவர்கள் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் எதுவும் பதிவாகவில்லை.
இதனால், பவானி ஆறு பாயும் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில் பதிவான 'காணாமல் போனோர்' (Missing Cases) புகார்களையும், கேரளா முழுவதும் பதிவான புகார்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் புதூர் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட உடல் பாகங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இச்சம்பவம் தொடர்பாகப் புதூர் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து,
உயிரிழந்தவர்கள் யார் ? கொலையாளிகள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: