ஆனைக்கட்டி சாலையில் நெகிழ்வூட்டும் காட்சி: கவனத்துடன் செயல்பட்ட வாகன ஓட்டிகளுக்குப் பாராட்டுகள்!
கோவை அருகே ஆனைக்கட்டி மலைப்பாதையில் குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைக் கூட்டம் சாலையைக் கடக்கும் வரை, வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி அமைதியாகக் காத்து இருந்து வழிவிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ள ஆனைக்கட்டி வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
துடியலூர் - ஆனைக்கட்டி சாலை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அடிக்கடி சாலையைக் கடப்பது வழக்கம். இதன் காரணமாக, இந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் எப்போதும் மிதமான வேகத்திலும் மிகுந்த கவனத்துடனும் செல்ல வேண்டும் என வனத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு, ஆனைக்கட்டி சாலையில் குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் அடங்கிய கூட்டம் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்து உள்ளது. அப்போது சாலையில் வாகனங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்ததால், யானைக் கூட்டம் ஆபத்தை உணர்ந்து சாலையோரத்திலேயே அமைதியாகக் காத்து இருந்து உள்ளது.
யானைகள் குட்டிகளுடன் சாலையைக் கடக்கத் தயங்கி நிற்பதைக் கண்ட வாகன ஓட்டிகள், உடனடியாகத் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளைக் குறைத்தும், வாகனங்களைச் சிறிது தூரத்திலேயே நிறுத்தியும் பொறுமை காத்தனர்.
வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நின்றதை உறுதி செய்த பிறகே, தாய் யானைகள் தங்களது குட்டிகளை நடுவே பாதுகாப்பு அரணாக அழைத்துக் கொண்டு சாலையை நிதானமாகக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. யானைக் கூட்டம் முழுமையாக வனப்பகுதிக்குள் செல்லும் வரை வாகன ஓட்டிகள் சலசலப்பின்றி அமைதியாகக் காத்து இருந்தனர்.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான இந்த இணக்கமான சூழலையும், வாகன ஓட்டிகளின் பொறுப்பான செயலையும் அங்கு இருந்த சிலர் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், வனவிலங்குகளுக்கு மதிப்பளித்த வாகன ஓட்டிகளுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: