மலுமிச்சம்பட்டியில் நேராகச் செல்லாமல் சாந்தபடி சென்ற அரசுப் பேருந்து : புதிய பேருந்துகள் வழங்க பொதுமக்கள் கோரிக்கை!
கோவை - பொள்ளாச்சி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று நேராகச் செல்லாமல் ஒருபுறமாகச் சாய்ந்தபடி ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பராமரிப்புக் குறைபாட்டைத் தோலுரித்துக் காட்டி உள்ளது.
கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் இன்று காலை அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.
அப்போது, அந்தப் பேருந்து வழக்கம் போல நேராகச் செல்லாமல், வாகனத்தின் ஒருபக்கம் அப்படியே தரையை நோக்கிச் சாய்ந்தபடி (One-sided lean) தள்ளாடியவாறு சென்று கொண்டு இருந்தது. இதைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பேருந்தின் சஸ்பென்ஷன் (Suspension) அல்லது ஆக்சில் (Axle) கோளாறு காரணமாகவே பேருந்து இப்படி ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு செல்வதாகவும், இதில் பயணிக்கும் பயணிகளுக்கும் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் மாபெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஆபத்தான பயணத்தை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் இணையவாசிகளின் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
தமிழகத்தில் இயங்கி வரும் பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றியும், பழமையான நிலையிலும் இயங்கி வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
"அரசுப் பேருந்துகளின் தற்போதைய பரிதாப நிலைமைக்கு இந்த வீடியோவே சாட்சி! தற்போதைய அரசாவது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழைய மற்றும் பழுதடைந்த பேருந்துகளை அகற்றி விட்டுப் புதிய அரசுப் பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்" எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: