வெள்ளி, 4 செப்டம்பர், 2026

தொழிலாளியைத் துரத்திய காட்டு யானை : மனித-யானை மோதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது ?

SHARE

முன்எச்சரிக்கை அமைப்புகளும் அறிவியல் பூர்வ தீர்வுகளும் தேவை என வலுக்கும் கோரிக்கை!

​ கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே கண்ணிமலை லோயர் டிவிஷன் பகுதியில், இன்று காலை தோட்டத் தொழிலாளி ஒருவரை காட்டு யானை திடீரெனத் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மூணாறு மற்றும் அதன் சுற்றி உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் வனவிலங்குகள், குறிப்பாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை சுமார் 8:30 மணி அளவில் கண்ணிமலை லோயர் டிவிஷன் தேயிலைத் தோட்டப் பகுதியில் தொழிலாளி ஒருவர் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

​அப்போது, அடர்ந்த புதர்மறைவிலிருந்து திடீரென வெளியேறிய காட்டு யானை ஒன்று, அந்தத் தொழிலாளியை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து துரத்தியது. சாமர்த்தியமாகச் செயல்பட்ட அந்தத் தொழிலாளி, அலறி அடித்து ஓடிப் அருகில் இருந்த பாதுகாப்பான இடத்திற்குச் சென்று உயிர் தப்பினார்.

மூணாறு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே தொடர்ந்து நிலவி வரும் மோதல் போக்கின் தீவிரத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. வனப்பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டங்களில் தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டிய அவல நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதுபோன்ற தொடர் மனித - வனவிலங்கு மோதல்களைத் தணிக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கீழ்க்கண்ட நடைமுறைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் வனவிலங்கு ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

 யானைகள் தோட்டப் பகுதிக்குள் ஊடுருவும் போதே தொழிலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் ரேடியோ காலர் மற்றும் நவீன சென்சார் எச்சரிக்கை கருவிகளை அமைத்தல்.

 யானைகளின் பாரம்பரிய நடைபாதைகளை கண்டறிந்து, அவற்றுக்கு இடையூறின்றித் தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல்.

 யானைகளைக் கண்டால் கூச்சலிடுவது, தூண்டிவிடுவது போன்ற செயல்களைத் தவிர்த்து, தொழிலாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் தற்காப்புப் பயிற்சிகளையும் விழிப்புணர்வையும் வழங்குதல்.

​மனிதர்களும் காட்டு யானைகளும் பாதுகாப்பாக இணைந்து வாழ்வதற்கான நிலையான மற்றும் நீண்ட காலத் தீர்வுகளைக் கேரள வனத்துறையும் தோட்ட நிர்வாகமும் இணைந்து உடனடியாக உருவாக்க வேண்டும் என்பதே இடுக்கி மக்களின் எதிர்பார்ப்பாகும்

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: