விண்வெளி வீரர் பிரசாந்த் நாயர், அபினவ் பிந்த்ரா பங்கேற்பு: மாணவர்களுடன் சவால்களை எதிர்கொள்ளும் அனுபவப் பயணம்!
எதிர்காலத்தின் சவால்களை மாணவர்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் வகையில், கோவை SSVM கல்வி நிறுவனங்கள் நடத்தும் 3 நாள் 'ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா' (Transforming India) 5-வது மாநாடு மாணவர்களுக்கான 'தடை ஓட்டப் பயிற்சியுடன்' (Obstacle Course) இன்று உற்சாகமாகத் தொடங்கியது.
உற்சாகமான தடையோட்டப் பயிற்சி:
"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" (Adapt to the Future) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ள இம்மாநாட்டின் முதல் நாளில், SSVM வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்ற 'ஸ்டூடண்ட் பர்ஸ்ட் ஆப்ஸ்டக்கிள் கோர்ஸ்' எனப்படும் சவாலான தடையோட்டப் பயிற்சி நடத்தப்பட்டது.
வெறும் சொற்பொழிவுகளுடன் தொடங்காமல், மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் வளைந்து கொடுத்தும், கம்பிகளைப் பிடித்துத் தொங்கியும் (Monkey bar), தடைகளைத் தாண்டித் தங்களைச் சமன் செய்தும் இந்தப் பயிற்சியில் அசத்தினர்.
ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் முன்னேறிய இந்த நிகழ்வு, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் நேரடிப் பாடமாக அமைந்தது.
நிர்வாகக் குழுவினரும் பங்கேற்பு:
SSVM கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர். மணிமேகலை மோகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், அறங்காவலர் எஸ். மோகன்தாஸ், இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ், இயக்குனர் நிதின் ஜெய் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து தடையோட்டச் சவால்களில் பங்கேற்று ஊக்கமளித்தனர்.
இது குறித்து டாக்டர். மணிமேகலை மோகன் பேசுகையில் :-
"குழந்தைகள் தங்களின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதை அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று சவால்களை எப்படித் தாண்டுவது என்று குழந்தைகள் கற்றுக்கொண்டால், நாளை வாழ்க்கை தரும் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.
கல்வி இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் கூறுகையில் :-
"இது வெறும் தலைப்பு அல்ல; கடினமான சூழ்நிலைகளில் மன உறுதியோடு தொடர்ந்து முன்னேறும் தைரியத்தைக் கண்டறியும் வாய்ப்பு" என்றார்.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு:
செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ககன்யான் விண்வெளி வீரர் மற்றும் இந்தியப் படைப்பிரிவு அதிகாரி ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா
இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்
பிரபல பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ருக்மணி விஜயகுமார்
ஆகிய சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். விளையாட்டு, உடல் அசைவுகள், ஒழுக்கம் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: