செவ்வாய், 3 நவம்பர், 2026

"தென்னை மர ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பது எப்படி ?" - குறுநல்லிபாளையத்தில் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு!

SHARE

கிராமப்புற வேளாண் பணி திட்டத்தின் (RAWE) கீழ் நேரடி செயல்முறை விளக்கம்: திரளாகப் பங்கேற்ற உள்ளூர் விவசாயிகள்!

கோவை மாவட்டம், குறுநல்லிபாளையம் ஊராட்சியில், தென்னை மரங்களில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் மற்றும் நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிந்து மகசூல் இழப்பைத் தடுப்பது குறித்து அமிர்தா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைச் சமீபத்தில் (நவம்பர் 1) நடத்தினர்.

அமிர்தா வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சுதீஷ் மணலில் நேரடி வழிகாட்டுதலின்படி, கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் (RAWE - Rural Agricultural Work Experience) கீழ் இந்த முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியின் இளம் வேளாண் மாணவர்களான அத்வைத், ஐஸ்வர்யா, அஸ்வதி, தேவி, ஹரிநாராயணா, ஹிர்த்யா, ஜனுஸ்ரீ, லோச்சன், ரோசினி, சாய் லோகேஷ், சிவா மற்றும் சுபாஷினி ஆகியோர் பங்கேற்றுப் பகுதி விவசாயிகளுக்குப் பல்வேறு தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தனர்.

நிகழ்ச்சியில், தென்னை மரங்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய் பாதிப்புகளுக்கும், நுண் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் ஏற்படும் அறிகுறிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளை மாணவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்டறியும் எளிய வழிகள்,

மரங்களின் இலை மற்றும் காய்களில் தோன்றும் அறிகுறிகள், மகசூல் இழப்பைத் தவிர்ப்பதற்கான சரியான உர மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்

குறித்து விவசாயிகளுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்கிச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர்.

தொடர்ந்து, குறுநல்லிபாளையம் பகுதி விவசாயிகளுடன் மாணவர்கள் நேரடியாகக் கலந்துரையாடினர். அப்போது, அப்பகுதியில் விவசாயிகள் சந்திக்கும் நடைமுறைச் சாகுபடிச் சவால்கள், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தென்னை சாகுபடியில் உள்ள பல்வேறு சிக்கல்களைக் கேட்டறிந்தனர்.

வேளாண் கல்வி நிறுவனங்களின் நவீனத் தொழில்நுட்ப அறிவை நேரடியாகக் கிராமப்புற விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் பாலமாக இந்நிகழ்ச்சி அமைந்ததாகவும், மாணவர்களின் இந்த முயற்சி சாகுபடி நுணுக்கங்களை அறிய மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் அப்பகுதி விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: