₹7,800 கொடுத்து ஏமாந்த கோவை குடும்பம்: தரமற்ற அரிசியைத் திருப்பிக் கொடுத்தும் பணத்தைத் தராமல் 1 வாரமாக இழுத்தடிப்பு!
"மக்களுக்காக என்றும், மக்களுக்காக...", "தரம், நம்பிக்கை, ஆரோக்கியம், நீண்ட ஆயுள்" எனப் பிரம்மாண்ட விளம்பரங்கள் செய்து மதுரையில் அரிசிக் கடை நடத்தி வரும் நபர் ஒருவர், தரமற்ற அரிசியைக் கொடுத்து ஏமாற்றியதோடு, அதற்கான பணத்தைத் திருப்பிக் கேட்க வந்த கோவை குடும்பத்தினரைக் கடந்த ஒரு வாரமாக அலைய விட்டு இழுத்தடித்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையைச் சேர்ந்த குடும்பத்தினர் சிலர், தங்களது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மதுரையில் உள்ள தங்களது பெற்றோர் வீட்டிற்குச் சென்று உள்ளனர். அப்போது, சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் "தரம், நம்பிக்கை" எனப் பல்வேறு விளம்பரங்கள் மூலம் பிரபலமடைந்த மதுரையில் உள்ள அந்த அரிசிக் கடைக்குச் சென்று உள்ளனர்.
அங்குச் சந்தை விலையை விட அதிகமாக, சுமார் ₹5,500 மட்டுமே பெற வேண்டிய அரிசிக்கு, ₹7,800 வரை பணத்தைக் கொடுத்து அரிசி மூட்டைகளை வாங்கி உள்ளனர்.
வளைகாப்பு நிகழ்ச்சியின் போது சமைப்பதற்காக அரிசி மூட்டையைத் திறந்து பார்த்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. விளம்பரத்தில் கூறியது போல் அல்லாமல், அரிசி மிகவும் தரமற்றதாகவும், சமைக்கப் பயன்படாத வகையிலும் இருந்து உள்ளது.
இதை அடுத்து, வாங்கிய அரிசி மூட்டைகளை அப்படியே எடுத்துக் கொண்டு அந்தக் கடைக்குச் சென்று, "அரிசி தரமாக இல்லை, எங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்" எனக் கேட்டு அரிசியை ஒப்படைத்து உள்ளனர்.
போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்ததை உணர்ந்த குடும்பத்தினர் பணத்தைக் கேட்ட போது, ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்து உள்ளார். கடந்த ஒரு வார காலமாக, பணத்தைப் பெறுவதற்காக அந்தக் கோவை குடும்பத்தினர் தினமும் கடைக்கு வந்து பல மணி நேரம் காத்துக் கிடந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
"மக்களுக்காகவே வாழ்கிறோம், ஆரோக்கியத்தையும் தரத்தையும் மட்டுமே வழங்குகிறோம்" எனப் பெரிய வசனங்களைப் பேசி விளம்பரம் செய்து விட்டு, தரமற்ற அரிசியைக் கொடுத்தது மட்டுமன்றி, நியாயமாகக் கேட்க வந்த வாடிக்கையாளர்களை ஒரு வாரமாக அலைக்கழித்த அரிசிக் கடைக்காரரின் இந்தச் செயல் அப்பகுதி மக்கள் இடையேயும் வாடிக்கையாளர்கள் இடையேயும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: