புதன், 20 மே, 2026

10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி - இரு மாணவிகள் விபரீத முடிவு !!!

SHARE

 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி - இரு மாணவிகள் விபரீத முடிவு !!!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில், மானாமதுரை மற்றும் வாலாஜாபாத்தில் இரு மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ஏ.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, விருதுநகர் மாவட்டம் கட்டணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அந்த மாணவி தமிழ் பாடத்தில் 45 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 43 மதிப்பெண்களும், அறிவியலில் 64 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 51 மதிப்பெண்களும் எடுத்து இருந்தார். இருப்பினும் கணிதம் பாடத்தில் அவர், 26 மதிப்பெண்களை எடுத்து இருந்ததால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனம் உடைந்த மாணவி, வீட்டில் விபரீத முடிவை தேடிக் கொண்டார்.

தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தேர்வு முடிவுகள் குறித்து மாணவ, மாணவிகள் அச்சப்பட வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்த இருந்த நிலையில், அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது, ஏ.புதுக்குளம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபாத் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 15 வயது மாணவி உயிரை மாய்த்துக் கொண்டார். இவர் அங்கு உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அந்த மாணவி சமூக அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அந்த மாணவி, வீட்டில் விபரீத முடிவை தேடிக் கொண்டார்.


மாணவியின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: