இன்ஸ்டா’ காதலனைத் தேடி பஸ் ஏறிய பள்ளி மாணவி ; திருப்பூர் வெள்ளகோவிலில் மடக்கிப் பிடித்த போலீஸ் - 12 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பு !!!
கோவையில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தைத் தாய் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்து நேற்று இரவு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பேருந்து நிலையம் அருகே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்கு உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவி முகம் தெரியாத நபர் ஒருவருடன் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) சமூக வலைத்தளம் மூலம் அடிக்கடி ‘ரகசிய லவ் ட்ராக்’கில் பேசி வந்ததை அறிந்து அவரது தாய் நேற்று மாலை பலமாகக் கண்டித்து உள்ளார்.
இதனால் கடும் கோபம் அடைந்த அந்த மாணவி, நேற்று இரவு 7.30 மணி அளவில் வீட்டை விட்டுத் திடீரென மாயமானார்.
இதுகுறித்து இரத்தினபுரி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் நள்ளிரவு முழுவதும் முழுக்க தீவிரத் ‘தேடுதல் வேட்டையில்’ களம் இறங்கினர்.
மாணவி வீட்டை விட்டு வெளியேறி எந்த ‘ரூட் மேப்’பில் சென்றார் என்பதைக் கண்டறிய, காந்திபுரம் 100 அடி சாலை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளை இரத்தினபுரி போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த மாணவி காந்திபுரத்தில் இருந்து பேருந்து மூலம் அண்டை மாவட்டமான திருப்பூரை நோக்கிப் பயணித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவியின் மொபைல் சிக்னல் மற்றும் சி.சி.டி.வி தடயங்களின் அடிப்படையில் தேடிச் சென்ற போலீசார், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகத்திற் இடமான முறையில் தனியாக நின்று கொண்டு இருந்த அந்தப் பள்ளி மாணவியை, போலீசார் மீட்டனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரை நேரில் சந்திப்பதற்காகவே அவர் கோவையில் இருந்து தனியாகப் பேருந்து ஏறி சென்று இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
‘நல்ல வேளையாக’ ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக, காணாமல் போன 24 மணி நேரத்திற்குள் சிறுமியை மீட்ட இரத்தினபுரி போலீசார், அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்கிவிட்டுப் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்: