கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 19 காவல்துறையினர் பணியிட மாற்றம் !!!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 19 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கரூரில் செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பரப்புரை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அப்போதைய தி.மு.க தலைமையிலான அரசு சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு நடத்திய விசாரணையில், விஜய் தாமதமாக வந்ததும், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கூட்டம் சேர்ந்ததும் தான் கூட்ட நெரிசல் விபத்துக்கு காரணம் என அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில், த.வெ.க சார்பில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க வேண்டுமென வலியுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து, பிற கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார்.
மேலும், த.வெ.க ஆட்சி அமைந்தது முதல் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் முதல் காவலர்கள் வரை பலரை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மூலம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது.
குறிப்பாக கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் மூன்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 காவல் துறையினர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக, இதில் சில காவலர்கள் தெற்கு மண்டலத்திற்கும் வடக்கு மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கரூர் டவுன் துணை கண்காணிப்பாளராக இருந்த செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை துணை கண்காணிப்பாளர் கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி துணை கண்காணிப்பாளர் தருமபுரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
அதே போல், 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் என 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், சி.பி.ஐ கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரையும் விசாரணை செய்தது. இந்த நிலையில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: