புதன், 20 மே, 2026

ஜூன் மாதத்திலிருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் - அமைச்சர் நிர்மல் குமார் உறுதி !!!

SHARE

 ஜூன் மாதத்திலிருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் - அமைச்சர் நிர்மல் குமார் உறுதி !!!

ஜூன் மாதத்தில் இருந்து 200 யூனிட் இலவச மின்சார திட்டம் நடைமுறைக்கு வரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “மின்சார வாரியத்தை லாபகரமாக கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக அரசு பல இடங்களில் முறைகேடு மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளது. கிட்டத்தட்ட கோடிக் கணக்கான பொதுமக்கள் பயன்பெறும் மின்சார வாரியத்தில் அனைத்தையும் சீரமைக்க வேண்டியது அவசியம். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மின்சார வாரியத்தை சீரமைத்து புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்கு, ஊழியர் பற்றாக்குறை இருக்கிறது. எனவே, ஊழியர்களை அதிகப்படுத்தி விட்டு தான் இந்த கணக்கீட்டை தொடங்க முடியும். ஏற்கனவே ஜூன் 10 ஆம் தேதியிலிருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மின்சார வாரியத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 2.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. வரும் மாதங்களிலிருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோர்களுக்கு பயனளிக்கும். கடன் அதிகமாக இருந்தாலும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை நம்மால் தொடர்ச்சியாக கொடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று நிர்மல் குமார் உறுதி அளித்தார்.

அதேபோல், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பொதுப் பணித் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், கட்டுமானப் பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அவர் துறையின் உயர் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

குறிப்பாக கட்டடங்களின் பராமரிப்பு, புதிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள், அரசு சார்ந்த உள்கட்டமைப்பு பணிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய விளையாட்டு கட்டமைப்புகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான முன்னெடுப்புகள் குறித்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை நடத்தினார்.

புதிய அரசின் அமைச்சர்களான நிர்மல் குமாரும், ஆதவ் அர்ஜுனாவும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திவரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: