வியாழன், 21 மே, 2026

அமைச்சரவையில் பங்கேற்க முஸ்லிம் லீக் சம்மதம்: 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை !!!

SHARE

 அமைச்சரவையில் பங்கேற்க முஸ்லிம் லீக் சம்மதம்: 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை !!!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. அதே போல் அ.தி.மு.க கூட்டணியில் ஒரு பிரிவினரான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.

நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தனிப் பெரும்பான்மை இல்லாததால், தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, ஐ,.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைத்து இருக்கிறது.

கடந்த மே 10 ஆம் தேதி ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவரைத் தொடர்ந்து, த.வெ.க வைச் சேர்ந்த என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜ்மோகன் பிரபு, கீர்த்தனா வெங்கட்ரமணன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு மே 16 ஆம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டன.

அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறாத 19 மாவட்டங்கள்

த.வெ.க தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், த.வெ.க வெற்றி பெறாத 8 மாவட்டங்கள் உள்பட 19 மாவட்டங்களில் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.

கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட த.வெ.க வெற்றி பெறவில்லை. இதனால் இந்த மாவட்டங்களில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற யாருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸை சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், த.வெ.க வெற்றி பெற்றும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத 12 மாவட்டங்கள் விவரம் வருமாறு:

திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கரூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அமைச்சரவையில் பங்கேற்கப் போவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அமைச்சரவையில் பங்கேற்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்து இருப்பதாகக் கூறினார். அதன்படி பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜஹான் நாளை அமைச்சராக பதவியேற்பார் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் அமைச்சரவையில் முஸ்லிம் லீக் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.

தமிழ்நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் வகித்து வந்த நிதித்துறை அவரிடம் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதில் அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இன்று பதவியேற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள துறைகள் விவரம் வருமாறு:

1 ஸ்ரீநாத் (தூத்துக்குடி) மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை,

2 எஸ். கமலி (அவிநாசி) கால்நடை பராமரிப்புத் துறை,

3 சி. விஜயலெட்சுமி (குமாரபாளையம்) பால் வளத் துறை,

4 ஆர்.வி. ரஞ்சித் குமார் (காஞ்சிபுரம்) வனத் துறை,

5 வினோத் (கும்பகோணம்) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை,

6 ராஜீவ் (திருவாடானை) சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்,

7 பி. ராஜ்குமார் (கடலூர்) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை,

8 வி. காந்திராஜ் (அரக்கோணம்) கூட்டுறவுத் துறை,

9 பி. மதன் ராஜா (ஓட்டப்பிடாரம்) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை,

10 கே. ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை,

11. எஸ். ராஜேஷ் குமார் (கிள்ளியூர்) சுற்றுலாத் துறை,

12 எம். விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு) கைத்தறி, ஜவுளி மற்றும் காதி,

13 டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்) வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை,

14 ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு) போக்குவரத்துத் துறை,

15 ரமேஷ் (ஸ்ரீரங்கம்) இந்து சமய அறநிலையத் துறை,

16 .பி. விஸ்வநாதன் (மேலூர்) உயர் கல்வித் துறை,

17 ஆர். குமார் (வேளச்சேரி) செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,

18 .கே. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்) வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை,

19 .வி. சம்பத் குமார் (கோவை வடக்கு) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,

20 .ஜெ. முஹமது பர்வேஸ் (அறந்தாங்கி) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு,

21 .டி. சரத்குமார் (தாம்பரம்) மனிதவள மேம்பாட்டுத் துறை,

22 .என். மரிய வில்சன் (ஆர்.கே.நகர்) நிதித் துறை,

23 .கே.விக்னேஷ் (கிணத்துகடவு) மதுவிலக்கு மற்றும் கலால் துறை,

23.புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நிறைவடைந்தது. 

அப்போதும் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதமும், அடுத்ததாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: