கோவையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழை - 200 வருட பழமையான மரம் விழுந்து கார், வீடு தரைமட்டம் !!!
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெருக்கெடுத்த வெள்ளம்; மின்கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிப்பு !!!
கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் பெய்த கன மழையால், அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட வேப்பமரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதில் கார், வீடு மற்றும் மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்து,
தமிழகத்தில் கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்தது. இருப்பினும், மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று மாலை சுமார் 4 மணி அளவில் கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மடை, தடாகம் மற்றும் இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ‘மெகா’ சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கு தடையின்றிக் கொட்டித் தீர்த்த மழையினால், முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
200 வருட மரம் விழுந்து விபத்து:
மழையின் போது வீசிய பலத்த காற்றினால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்த சுமார் 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய வேப்பமரம் ஒன்று திடீரென அடியோடு முறிந்து அருகில் இருந்த வீட்டின் மீதும், நிறுத்தப்பட்டு இருந்த கார் மீதும் ‘மளமளவென’ சரிந்தது. இந்த விபத்தில் காரும், வீட்டின் ஒரு பகுதியும் நசுங்கிச் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால், அப்பநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியிலும், மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அக்னி நட்சத்திர வெயிலுக்கு மத்தியில் கோவையில் பெய்த இந்த திடீர் கனமழை வெப்பத்தைத் தணித்தாலும், பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: