வியாழன், 28 மே, 2026

சரக்கு கிடைக்கல பாஸ்" - கோவையில் 215 டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல் ; கேரளா எல்லையை நோக்கிப் படையெடுத்த மதுப்பிரியர்கள் !!!

SHARE

 சரக்கு கிடைக்கல பாஸ்" - கோவையில் 215 டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல் ; கேரளா எல்லையை நோக்கிப் படையெடுத்த மதுப்பிரியர்கள் !!!

​8 கோடி ரூபாய் மது விற்பனை காலி... பார் உணவுகள் வீணாகின... கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் எப்.எல்.2 பார்களும் அடைப்பு !!!

 கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரே நாளில் சுமார் 215 டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், கோவை மாவட்டமே "சரக்கு" கிடைக்காமல் மதுப்பிரியர்கள் கூட்டம், கூட்டமாக வீதிகளில் அலைந்து திரிந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகின்றன.

​தமிழகம் முழுவதும் அண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், மூடப்பட்ட கடைகளில் பணி புரிந்த ஊழியர்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை ஊழியர்கள் தலையில் கட்டாமல் வெளிநபர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவையில் நேற்று ஊழியர்கள் சங்கத்தினர் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் குதித்தனர்.

 காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் டாஸ்மாக் கடைகளில் மட்டுமே கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால், 'எப்.எல் 2' (FL 2) எனப்படும் தனியார் மனமகிழ் மன்ற மது விற்பனைக் கூடங்களில் (Private Clubs & Bars) இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

 பாட்டில்களைத் திரும்பப் பெறும் வேலையால் டாஸ்மாக் பணியாளர்களுக்குக் கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, இதை வெளிநபர்கள் அல்லது பிரத்யேக ஏஜென்சிகள் மூலம் செயல்படுத்த வேண்டும்.

 கோவையில் விதிமுறைகளின்படி பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே 500 மீட்டருக்குள் இருக்கும் கடைகளை அகற்றுவதற்குப் பதிலாக, 500 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருந்த 12 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இது அருகில் உள்ள தனியார் மனமகிழ் மன்றங்களுக்கு லாபம் தரும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. எனவே, வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள தனியார் மதுக் கூடங்களையும் மூட வேண்டும்.

​முன்னறிவிப்பு ஏதுமின்றி கோவையில் 215 கடைகளும் அடைக்கப்பட்டதால், நேற்று டாஸ்மாக் பார்கள் அனைத்தும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. பார்களில் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள சைவம் மற்றும் அசைவ உணவுகள் வீணாகிப் போனதாக பார் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

 இந்த திடீர் ஸ்ட்ரைக்கால் கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் மது விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதாக ஊழியர்கள் தரப்பில் கணக்கிடப்பட்டு உள்ளது.

​கோவையில் எங்குமே மது கிடைக்காததால், நிலைகுலைந்து போன மதுப்பிரியர்கள், கோவை எல்லையை ஒட்டி உள்ள அண்டை மாநிலமான கேரளாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். இதனால் தமிழக-கேரள எல்லையில் உள்ள கள்ளுக்கடைகள் மற்றும் மதுபானக் கடைகளில் தமிழக மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

 இதற்கு இடையே, கேரளாவில் இருந்து கோவைக்குள் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழக எல்லைச் சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

​மற்றொருபுறம், கோவையில் செயல்பட்டு வரும் சுமார் 80-க்கும் மேற்பட்ட தனியார் 'எப்.எல் 2' மனமகிழ் மன்றங்களை நோக்கி மதுப்பிரியர்கள் ஒட்டுமொத்தமாகப் பாய்ந்தனர். அங்கு கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அலைமோதியதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் எனக் கருதி, கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பல தனியார் எப்.எல் 2 பார்களும் நேற்று அவசர, அவசரமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 கோவையில் நேற்றைய நள்ளிரவு வரை நீடித்த இந்த "மது பஞ்சம்" மற்றும் குடிமகன்களின் அலப்பறைகள் சோஷியல் மீடியாக்களில் தற்பொழுது "டிரெண்டிங்" டாபிக் ஆகி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: