டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய்; சோனியா, ராகுலை சந்திக்கவில்லை !!!
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று இருந்த முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்த நிலையில், நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லிக்கு அவர் நேற்று அரசு முறை பயணம் மேற்கொண்டு இருந்தார். காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் மதியம் 1 மணி அளவில் தலைநகரை சென்று அடைந்தார். அங்கு உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு முதலில் சென்றார். அங்கு அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள காவலர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
பின்னர், மாலை 4:30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் விஜய், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார்.
குறிப்பாக, மேகதாது அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் என மாநிலத்தின் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் முன்வைத்தார்.
பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித் தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாநிலத்தின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்திட மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிதியமைச்சரிடம் அவர் முன்வைத்தார்.
தமது டெல்லி பயணத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை விஜய் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அவர்களை சந்திக்காமல் நேற்று காலை முதலமைச்சர் விஜய் டெல்லியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சர் விஜய் வரும் ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாகவும், அப்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக உருவெடுத்தது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் எனும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் தி.மு.க கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், வி.சி.க, ஐ.யு.எம்.எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

0 கருத்துகள்: