புதன், 27 மே, 2026

மகனை பிடிச்சு ஜெயில்ல போட்டு விடுவோம்; ஒரு லட்சம் ரூபாய் கேட்டு தாயை மிரட்டிய போலி போலீஸ்கள் கைது !!!

SHARE

 மகனை பிடிச்சு ஜெயில்ல போட்டு விடுவோம்; ஒரு லட்சம் ரூபாய் கேட்டு தாயை மிரட்டிய போலி போலீஸ்கள் கைது !!!

ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடு, இல்லைனா உன் மகனை பிடிச்சு ஜெயில்ல போட்டுவிடுவோம்" என மிரட்டல் விடுத்த போலி போலீஸ்கள் இருவரை சென்னை போலீஸார் கைது செய்து உள்ளனர்.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள விஸ்வநாதபுரம் மூன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் செல்வி (53). இவரது மகன் டெல்லியில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு செல்வி வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது இரண்டு நபர்கள் சாதாரண உடையில் வீட்டிற்குள் நுழைந்து, தங்களை போலீஸ் எனக் கூறி, அவரது மகன் எங்கே என கேட்டு உள்ளனர்.

அதற்கு செல்வி தனது மகன் டெல்லியில் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார். இதை அடுத்து, உனது மகன் குற்ற செயலில் ஈடுபட்டு உள்ளார், ஆகையால் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறி அத்துமீறி அவர்கள் சோதனையிட்டு உள்ளனர். ஆனால் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. ஆகையால் அவர்கள் இருவரும் செல்வியை மிரட்டி, அவர் அணிந்து இருந்த சுமார் அரை சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு சென்று உள்ளனர்.

மேலும், அவரது மகனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டி உள்ளனர். வீட்டின் வெளியே காருக்குள் உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆகையால் உடனடியாக பணத்தை ஏற்பாடு செய் எனவும் செல்விக்கு நெருக்கடி கொடுத்து உள்ளனர்.

ஆனால், செல்வியால் அவர்கள் கேட்ட பணத்தை வழங்க முடியவில்லை. ஆகையால், செல்வியை செல்போனில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர்கள் தொடர்ச்சியாக பணத்தைக் கேட்டு மிரட்டல் விடுத்து உள்ளனர். பணத்தை வழங்கவில்லை என்றால் அவரது மகனை குற்ற வழக்கில் சிறையில் அடைத்து விடுவோம் என்றும் திகிலூட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி, இதுகுறித்து சென்னை கோடம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் பரபரப்பு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாகவே செல்வியை மிரட்டியவர்கள் போலி போலீஸ்கள் என்பது தெரிய வந்தது.

இதை அடுத்து, சி.சி.டி.வி கேமராவின் பதிவுகள் மற்றும் செல்வியை தொடர்பு கொள்ள அவர்கள் பயன்படுத்திய செல்ஃபோன் எண் ஆகியவற்றைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் சுகுமாரன் (43), அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது-33) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்த நிலையில், சென்னையில் வைத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார், அவர்களிடம் இருந்து 2.3 கிராம் தங்க கம்மலை மீட்டனர். அத்துடன், குற்ற செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்திய ஐஃபோன் உட்பட இரண்டு செல்ஃபோன்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: