புதன், 27 மே, 2026

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து விற்பனை செய்த நபர் கைது !!!

SHARE

 பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து விற்பனை செய்த நபர் கைது !!!

சமூக வலைத்தளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை எடுத்து, அவற்றை தவறாகச் சித்தரித்து பணத்திற்காக சமூக வலைத்தளங்கள் மூலமாகவே விற்பனை செய்த நபரை சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படங்களை மர்மநபர் ஒருவர் தவறாகச் சித்தரித்து இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். இதனைக்கண்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணின் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்ட மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமாரின் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அத்துடன், சம்மந்தப்பட்ட அந்த சமூக வலைதளப்பக்கங்களில் இருந்த தரவுகளையும் தீவிர ஆராய்ந்தனர்.

அப்போது, தாம்பரம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்குமார் என்ற நபர் இதைச் செய்து உள்ளார் என்பதை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்துச் சென்று புவனேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை மட்டும் டவுன்லோடு செய்து அவற்றை தவறாகச் சித்தரித்து இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் பணத்திற்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்து உள்ளது.

அவரிடம் இருந்து செல்ஃபோன் மற்றும் லேப்டாப்பைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். விரைந்து செயல்பட்ட தனிப்படை காவல் துறையினருக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளார். செல்ஃபோனுக்கு வரும் தேவையற்ற இணையதள லிங்க்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: