விமான நிலையமா ? அல்லது தொண்டர்கள் பார்க்கிங்கா ?" - கோவை ஏர்போர்ட்டில் வி.ஐ.பி வரவேற்பால் போக்குவரத்து பாதிப்பு !!!
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி... விதிகளை மீறி தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் குமுறல் !!!
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வி.ஐ.பி-க்களை வரவேற்க வரும் ஆதரவாளர்கள், தங்கள் வாகனங்களை விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் சாலை ஓரங்களில் தாறுமாறாக நிறுத்திச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விமான நிலையத்தை அடைவதற்குள் பெரும் அவதிக்கு உள்ளாகும் அவலம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் விமான நிலையம், தொழில் நகரமான கோவையின் முக்கிய நுழைவு வாயிலாகத் திகழ்கிறது. சமீபகாலமாக இங்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க, நூற்றுக் கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது சொகுசு வாகனங்கள், பைக்குகள் மற்றும் வேன்களில் குவிந்து வருகின்றனர். இவ்வாறு வரும் கூட்டத்தினர், எந்தவித கட்டுப்பாடும் இன்றி, விமான நிலையத்தின் பிரதான சாலை மற்றும் வாகனங்கள் வந்து செல்லும் பாதையை மறித்துத் தங்களது வாகனங்களை வரிசையாகவும், தாறுமாறாகவும் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இதனால், கோவை விமான நிலையத்திற்கு உரிய நேரத்தில் வந்து சேர வேண்டிய பயணிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
குறிப்பாக, நடைபயிற்சியில் சிரமம் உள்ள முதியோர்கள், சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவசர தேவைக்காக விமானம் பிடிக்கச் செல்லும் பயணிகள், இந்த வாகன நெரிசலால் விமான நிலையத்தின் நுழைவாயிலை அடைய முடியாமல் பல நூறு மீட்டர் தொலைவிலேயே இறங்கி நடக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
"நாங்கள் கஷ்டப்பட்டு நேரத்திற்கு வந்து விடலாம் என்று நினைத்தால், இந்தத் தொண்டர்கள் கூட்டம் போடும் வாகன நெரிசலில் சிக்கி விமானத்தைத் தவறவிடும் சூழல் ஏற்படுகிறது.
சட்டம்-ஒழுங்கு போலீஸாரும், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த வி.ஐ.பி ஆதரவாளர்களின் அராஜகத்தை ஏன் ? கண்டும் காணாமல் இருக்கிறார்கள் ?" என்று பயணிகள் சமூக வலைதளங்களில் தங்களது கடும் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.
விமான நிலையத்திற்கு வருகை தரும் ஆதரவாளர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், பிரதான சாலைகளை மறிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது கடுமையான "நோ-பார்க்கிங்" அபராதம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோவை மாநகரப் போக்குவரத்துப் போலீஸார் மற்றும் விமான நிலைய நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இனிவரும் காலங்களிலாவது, விமான நிலையத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி, வி.ஐ.பி வரவேற்பு கலாச்சாரத்தை விமான நிலைய வளாகத்திற்கு வெளியே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மேற்கொள்ளுமாறு அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

0 கருத்துகள்: