விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன் - நடிகர் ரவி மோகன் !!!
விவாகரத்து கிடைக்கும் வரை புதிய திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்து உள்ளார்.
நடிகர் ரவி மோகன் அவரின் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவகாரத்து கோரி கடந்த 2024 செப்டம்பரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளதால், இருதரப்பினரும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை முன் வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பாக, ரவி மோகனின் தோழியான கெனிஷா, ஆர்த்தி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறாக பேசக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதுபோன்ற சூழலில், ரவி மோகன் - ஆர்த்தி தம்பதி விவகாரத்திற்கு கெனிஷா தான் காரணம் என பலரும் வீடியோ பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கெனிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், 'ரவி ஒன்றும் குழந்தை கிடையாது. அதேபோல நானும் பாலியல் தொழிலாளி கிடையாது' என ஆவேசமாக பதிவிட்டு இருந்தார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்கு உள்ளேயே, கெனிஷா மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அதில், 'நான் சென்னையை விட்டும், இறுக்கமான பிடியை விட்டும் செல்கிறேன்' என உருக்கமாகப் பதிவிட்டு இருந்தார்.
அதைப் பார்த்த பலரும் ரவி மோகன், கெனிஷா இருவரும் பிரிந்து விட்டனரா ? என சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், ரவி மோகன் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ரவி என்றாலே மிகவும் சாதுவானவர், எது சொன்னாலும் கேட்டுப்பாரு, புரிஞ்சுப்பாரு என்பார்கள். ஆனால், சாது மிரண்டால், காடு கொள்ளாது. அதுபோல, சாதுவாக இருந்த என்னை நிறைய பேர் ஏமாற்ற நினைக்கிறார்கள்.
எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை, நான் இனி மேல் புதுப் படங்களில் நடிக்கப் போவதில்லை. அதே போல, நான் யாரையும் தனிப்பட்டு சொல்ல விரும்பவில்லை. மூன்று எழுத்து இட்லி நடிகை தான் எனது வாழ்க்கையை அழித்து விட்டார். எனது சொந்த வாழ்க்கையை பற்றி பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை.
எனது வாழ்க்கையில் 23 ஆண்டுகள் இரவுப் பகல் பாராமல் உழைத்து உள்ளேன். ஆனால், இந்த 23 வருடத்தில் பெண்கள் பின்னால் போனேன்னு சொல்லி, என்னை கேவலப்படுத்துகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். என்னைப் போன்ற ஒருவரை திரையுலகில் காட்டுங்கள் பார்க்கலாம்.
திருமணத்திற்குப் பிறகு எனது மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்தினார்கள். அதை வெளியில் சொன்னால் எனது இமேஜ் போய்விடும், அதனால் சொல்ல மாட்டேன் என நம்பினார்கள். இனி மேலும் நான் என்னுடைய இமேஜ்க்காக இருக்க மாட்டேன். என்னுடைய குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. எப்போதும் பாதுகாவலர்கள் உடனே வருகிறார்கள்.
எனக்கு தனியாக ஒரு வங்கிக் கணக்கு கூட கிடையாது. ஆர்த்தியும் நானும் இணைந்த வங்கிக் கணக்கு தான் இருந்தது. அந்த சமயத்தில் எந்த செலவு செய்தாலும், எதற்காக செலவு செய்தீர்கள் என பலவித கேள்விகளை என்னிடம் ஆர்த்தி எழுப்புவார். எனக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்து உள்ளது. என்னை மிரட்டி தான் கல்யாணம் செய்ய வைத்தார்கள்” என கண்ணீர் மல்க பேசினார்.
தொடர்ந்து ஆர்த்தி தங்கையின் முன்னாள் கணவர் பிரசாத்துடன் இணைந்து பேசிய ரவி மோகன், “எனக்கும், இவருக்கும் நிறைய கொடுமைகள் நடந்து இருக்கிறது. ஆனால், எனக்கு முன்பாகவே அவர் தப்பித்து விட்டார். பிரசாத்தை அவர்கள் காலில் விழ வைத்தார்கள். என்னால் காலையில் எழுந்து வேலை பார்க்க முடியவில்லை. இதற்கு மேல் என்னால் முடியாது. என் குழந்தைகளுக்காக தான் நான் உயிரோடே உள்ளேன். எப்போது விவாகரத்து கிடைக்கிறதோ, அப்போது தான் எல்லாம் சரியாகும்” என்றார்.
இதற்கு ஆர்த்தி அவரது எக்ஸ் பக்கத்தில், “தூங்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பக் கூடாது. அதுவும் அவள் ஒரு தாய் சிங்கமாக இருந்தால், கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும். என்னுடைய கண்ணியமான, அமைதியை ஒருபோதும் பலவீனம் என்று தவறாக எண்ணவோ, அதைத் தவறாக பயன்படுத்தவோ கூடாது. தேவைப்பட்டால், எனது கண்ணியத்தை பாதுகாக்கவும், குழந்தைகளுக்காகவும் உலகை எதிர்கொள்வேன். ஏனென்றால், உண்மை எப்போதும் வெல்லும்” என பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவிற்கு நடிகை குஷ்பு, “ஒரு தாயுடன் எப்போதும் மோதாதீர்கள். நீ சிங்கக் குட்டிகளுடன் இருக்கும் ஒரு பெண் சிங்கம்” என கமெண்ட் பதிவிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: