ஞாயிறு, 17 மே, 2026

அ.தி.மு.க வினர் வழங்கிய மனுக்கள் மீது உரிய நேரத்தில் முடிவு - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் !!!

SHARE

 அ.தி.மு.க வினர் வழங்கிய மனுக்கள் மீது உரிய நேரத்தில் முடிவு - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் !!!

அ.தி.மு.க சார்பாக இபிஎஸ், வேலுமணி தரப்பினர் அளித்து உள்ள மனு மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவ்வை சண்முகம் சாலையில் பொதுமக்களை சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தேர்தலில் தன்னை வெற்றி பெற செய்ததற்காக நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இறைவன் அருளால் தமிழ்நாடு முதல்வர், மக்கள் விரும்பும் முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியோடு ஆயிரம் விளக்கு தொகுதியில் என் பணிகளை இப்பொழுது தொடங்கியுள்ளேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் பெருவாரியான வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நான் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி பல்வேறு பிரச்சனைகளை கொண்டிருக்கிற தொகுதி என்பதை நான் தேர்தலில் நிற்கும் போது கண்டறிந்தேன்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் சிறிய சந்துகளில் குடியிருக்கும் குடும்பங்கள் நான்கு ஐந்து தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் வேட்பாளராக இப்பகுதிக்கு வந்தபோது, எத்தனையோ வேட்பாளர்கள் வந்தனர், வாக்குச் சேகரித்தனர், ஒருவர் கூட எங்களை திரும்பி பார்க்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். அப்போது இப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி நான் கொடுத்தேன். வெற்றி பெற்ற பிறகு நான் வருகிற முதல் இடமாக அவ்வை சண்முகம் சாலை இருக்கும், இங்கு நான் வந்து உங்களை பார்ப்பேன் எனக் கூறியிருந்தேன்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இந்த பகுதிக்கு வந்து உள்ளனர். இந்த பகுதியில் நிலவும் அவல நிலைக்கு தீர்வுக் காண வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறி இருக்கிறேன். அவ்வை சண்முகம் சாலையில் குடியிருக்கும் மக்களுக்கு இன்னும் ஒருமாத காலத்திற்குள் கழிவுநீர் அகற்றப்பட்டு அந்த பிரச்சனைக்கு முற்றிலுமாகத் தீர்வுக் காணப்படும். ஒருமாத காலத்திற்குள் தற்காலிக சாலை அமைக்கப்படும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை வசதிகள் செய்யப்படும். 'ஆயிரம் விளக்கு தொகுதியில் 1,000 பணிகள்' என்ற தலைப்பில் எல்லா பணிகளும் செய்ய இருக்கிறோம்.

நாளை மாலை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களுக்கும் செல்ல இருக்கிறோம். மைதானங்களில் விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். ஆயிரம் விளக்கு தொகுதியில் விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அனைத்து பொதுநல சங்கங்களையும் வட்டங்கள் வாரியாக அழைத்து அவர்களை இணைத்து மக்கள் பணிகள் செய்யப்படும்" எனத் தெரிவித்து உள்ளார்.

அமைச்சரவை முழுமை அடையாமல் உள்ளது; அடுத்தக்கட்ட அமைச்சரவைப் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 

"எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்து உள்ள முதல்வர் நமக்கு கிடைத்து உள்ளார்; ஏற்ற நேரத்தில் ஏற்ற விதமாக அவர் செயல்படுவார்" என்றார்.

அ.தி.மு.க வின் இரு தரப்பினர் மனு அளித்தது குறித்த கேள்விக்கு, 

"அ.தி.மு.க வில் இரண்டு தரப்பினரும் மனுக்களை அளித்து உள்ளனர். அந்த மனுக்கள் ஆய்வில் உள்ளது; உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: