ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ - நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை !!!
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் 108 இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அறுதி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்னர், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடி படை, போதைப் பொருள் தடுப்புச் சிறப்புப் படை ஆகிய மூன்று திட்டங்களில் முதல் கையெழுத்தப் போட்டார். இதனை அடுத்து 717 டாஸ்மாக் கடைகள் மூடல், வரம்புடன் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகளாகப் பார்க்கப்படும் மேகதாது அணை விவகாரம், கரீப் காலத்திற்கான உர விநியோகம், மாநில மேம்பாட்டிற்கான நிதி, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேற்கூறிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட்டு சென்று சந்தித்தார்.
ஓசூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் மெட்ரோ - மத்திய நிதியமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை
ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்து உள்ளார்.
டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்: