ஞாயிறு, 17 மே, 2026

பிரியாணி சண்டை - மனைவியை அடித்து கொலை செய்த கணவன் !!!

SHARE

 பிரியாணி சண்டை - மனைவியை அடித்து கொலை செய்த கணவன் !!!

பிரியாணி வாங்கியதில் ஏற்பட்ட குடும்ப சண்டையில் மனைவியை கட்டையால் அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த செங்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் விவசாயக் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமதி என்கின்ற மனைவியும், நான்கு மகள்களும் உள்ளனர்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமதியின் உறவினர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சுமதி ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி ரமேஷிடம் கொடுத்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, ரமேஷ், சுமதி மற்றும் அவரது தந்தை வடிவேல் ஆகிய மூவரும் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அரியலூர் மருத்துவமனைக்கு சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

அப்போது வி.கைகாட்டி அருகே வந்த போது, ரமேஷ் மதிய உணவுக்காக அங்கு உள்ள ஹோட்டலில் பிரியாணி வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்து உள்ளார். ரூ.750-க்கு பிரியாணி வாங்கியதை அறிந்த சுமதி, கணவரிடம் ஏன் இவ்வளவு பணம் கொடுத்து பிரியாணி வாங்கினீர்கள் ? எனக் கேட்டு சண்டை போட்டு உள்ளார்.

அப்போது அங்கு இருந்த சுமதியின் தந்தை வடிவேல், இருவரையும் பேசி சமரசம் செய்து வைத்து, பின்னர் அவரது சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். இதனை அடுத்து, நேற்று காலை மீண்டும் பிரியாணி குறித்த சண்டை எழுந்து உள்ளது. அப்போது சுமதி ரமேஷை குச்சியால் தாக்கி உள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அருகில் இருந்த சவுக்கு மரக்கட்டையை எடுத்து சரமாரியாக சுமதியை தாக்கினார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை வெளியில் தெரியாமல் மறைத்த ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், சுமதியின் உடலில் ஏற்பட்ட காயங்களை மஞ்சளால் பூசி மறைத்து பின்னர் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டுக்கு கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

மகள் இறந்த தகவல் அறிந்த அவரின் தந்தை வடிவேல், சுமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு சுமதியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் ரமேஷிடம் நடத்திய விசாரணையில், மனைவியை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். 

மனைவியை கொலை செய்து, அதனை மறைத்து இடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி ரமேஷை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: