நண்பரின் வீட்டில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது !!!
சென்னையில் நண்பரின் வீட்டில் மது குடித்த தலைமைக் காவலர், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் வேலப்பன் (35). இவர், கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தனது நண்பரின் வீட்டுக்குச் சென்று, அங்கு இருவரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர், மதுபோதையில் நண்பர் உறங்கச் சென்று உள்ளார். அப்போது வேலப்பன், அந்த வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த நண்பரின் உறவினர் மகனான 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுவனுக்கு மது கொடுத்து அவர் தவறான செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பயத்தில் கூச்சலிட்ட அந்த சிறுவன், தலைமைக் காவலர் வேலப்பனை டி.வி ரிமோட்டால் தாக்கி விட்டு கதவை பூட்டி விட்டு வெளியே ஓடி விட்டார். சிறுவன், அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் போதையில் இருந்த தலைமைக் காவலர் வேலப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்து உள்ளன. காவலர் வேலப்பன் கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று இருவரும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்தார். நேற்றிரவு 11.30 மணி அளவில் நண்பரின் வீட்டுக்குச் சென்று வேலப்பன் மது அருந்தி உள்ளார். பின்னர் அவரது நண்பர் போதையில் உறங்கிவிடவே, அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த உறவினரான 16 வயது சிறுவனை எழுப்பி வலுக் கட்டாயமாக அவருடைய வாயில் மது ஊற்றி தவறாக நடந்து கொண்டது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
அதன் பிறகு தான் சிறுவன் காவலரை அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கு இருந்து தப்பிச் சென்று அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரியவந்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து காவலர் வேலப்பனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ் திடீரென அசோக் நகர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 22 ஆம் தேதி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அமல்ராஜ், சென்னை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.
சிறுவன் ஒருவனுக்கு காவலர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அசோக் நகர் காவல் நிலையத்தில் கைதாகி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்கு குறித்த விவரங்களை அமல்ராஜ் கேட்டறிந்தார்.
அசோக் நகர் காவல் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் ஆய்வு செய்து, பல்வேறு பணிகள் குறித்து அமல்ராஜ் கேட்டறிந்தார். ரோந்து பனிகள், வாகன தணிக்கை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், புகார் கொடுக்க வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்தப்படுவது ஆகியவை குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர், காவலர்களுக்கு அறிவுரையும் காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கி உள்ளார்.

0 கருத்துகள்: