கோவை, சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கு : குற்றவாளி கார்த்தியைச் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து வந்து போலீஸ் விசாரணை !!!
விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்... கோவை எஸ்.பி பவன்குமார் ரெட்டி சூலூர் காவல் நிலையத்தில் அவசர ஆலோசனை !!!
கோவை, சூலூர் அருகே 10 வயது பிஞ்சுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முக்கியக் குற்றவாளி கார்த்தியை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பவம் நடந்த கண்ணம்பாளையம் குளக்கரைக்கு நேரில் அழைத்து வந்து, கொடூரம் எப்படி ? அரங்கேறியது என்பது குறித்துத் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.
சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டுக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதன்மைக் குற்றவாளி கார்த்தி மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் தான் கோவை போக்சோ நீதிமன்றம் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
போலீஸ் காவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்தியைப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரகசியமாகத் தனிப்படை போலீஸார் கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் அழைத்து வந்தனர்.
சிறுமி எங்கு வைத்துக் கடத்தப்பட்டார், ? குளக்கரைக்கு எப்படி ? அழைத்து வரப்பட்டார், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை எவ்வாறு அரங்கேற்றப்பட்டது, சடலத்தை எங்கு ? வீசினார்கள் என்பது குறித்துக் குற்றவாளி கார்த்தி செய்து காண்பித்ததை வீடியோ பதிவுகளுடன் சாட்சியங்களைச் சேகரித்தனர்.
இந்தக் கள விசாரணையைச் சூலூர் டி.எஸ்.பி கரிகால் பாரி சங்கர் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார்.
விசாரணை முடிந்ததும், அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டு தர்ம அடி கொடுத்து விடுவார்கள் என்பதால், குற்றவாளி கார்த்தியைச் சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், பாதுகாப்பு கருதி போலீஸார் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று சேர்த்தனர்.
இதற்கிடையே, வழக்கின் தற்போதைய நிலவரம் மற்றும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பவன்குமார் ரெட்டி நேற்று மாலை திடாரெனச் சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார். எஸ்.பி-யின் இந்த திடீர் வருகையால் சூலூர் காவல் நிலைய வளாகமே பரபரப்பாகக் காட்சியளித்தது.
காவல் நிலையத்தில் தனிப்படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
"சூலூர் சிறுமி கொலை வழக்கில் மிகத் துரிதமாகத் துப்பு துலக்கப்பட்டு, சாட்சியங்கள் திரட்டப்பட்டு உள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் (அதிகபட்சம் 3 தினங்களில்) இந்த வழக்கின் முழுமையான குற்றப்பத்திரிகை (Charge Sheet) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரக் காவல்துறை அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
போலீஸ் காவல் முடிவடைவதற்குள் இன்னும் ஓரிரு நாட்களில் நாட்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வழக்கை நீதிமன்றம் மூலம் நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனையைப் பெற்றுத் தரக் கோவை மாவட்ட காவல்துறை வேகம் காட்டி வருவது பொதுமக்கள் இடையே சற்றே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: