கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ; ஒரே நாளில் தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி அலுவலகங்களில் அதிரடி ரெய்டு - முகூர்த்த நாளில் சிக்கிய கணக்கில் வராத லட்சக் கணக்கிலான பணம் !!!
கோவை, சரவணம்பட்டியில் போலீஸ் நிலைய சாலையில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பிரபுதாஸ் ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது தாசில்தார் சங்கீதாவும் உடன் இருந்தார். பத்திரப்பதிவு விவரம் , அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் கணக்குகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கணக்கில் வராத பண பரிவர்த்தனைகள் மற்றும் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கணினியிலும் ஆய்வு செய்யப்பட்டது.
கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா ? என்றும் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல் தொண்டாமுத்தூரில் உள்ள சார்ப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜே ஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, எழில் அரசி ஆகியோர் சோதனை நடத்தினார்கள். கோட்டாட்சியர் சங்கீதா உடன் இருந்தார். அந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கை, வசூலான தொகை ஆகியவை குறித்து ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடைபெற்றது.
சோதனையின்போது அலுவலகங்களுக்கு வந்து இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மேஜைகள், கோப்புகள் வைக்கும் அலமாரிகள், ஊழியர்களின் கைப்பைகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பிடிபட்டது
சரவணம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 21 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர்(பொறுப்பு) செல்வகுமாரிடம் விசாரணை நடைபெறுகிறது. மேலும் அங்கு பணம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களாக செயல்பட்ட சிதின், ராஜகோபால் ஆகியோரும் பிடிபட்டனர். அவர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.
தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின்போது சார்பதிவாளர் ஆனந்தன் அங்குஇல்லை.இருந்தாலும் இந்த கணக்கில் வராத பணம் என்பதால் ஆனந்தன்தான் இதற்கு பொறுப்பு என்றும், அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அங்கு புரோக்கராக செயல்பட்ட முகுந்தன் என்பவரும் பிடிபட்டார்.
சார்பதிவாளர்கள் 2 பேரிடமும், புரோக்கர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: