தனியார் பள்ளி விடுதியில் 10-ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் ; போலீஸார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி கோவை கலெக்டரிடம் தந்தை மனு - பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை !!!
மாணவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார்.
கோவை, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் நேஷனல் மாடல் பள்ளியில் மாணிக்ராஜ் என்பவரின் மகன் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். பள்ளி விடுதியில் தங்கி கல்வி கற்று வரும் தனது மகனை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் ஒருவர் தாக்கியதாகவும், அதனால் அவரது கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டு இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் மாணவனின் தந்தை தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், மூன்று மாதங்கள் கடந்தும் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், காவல் துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாகவும், தனது மகனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவித்த அவர், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து உள்ளார்.

0 கருத்துகள்: