புதன், 3 ஜூன், 2026

உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்; திண்டுக்கல் அருகே வினோதம் !!!

SHARE

 உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்; திண்டுக்கல் அருகே வினோதம் !!!

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் உடலில் சேறு பூசிக் கொண்டு செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்துக் கொண்டு பக்தர்கள் வினோத நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூரில் சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பட்டவன் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில்களின் உற்சவவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவில் அம்மன் வீதி உலா, பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் இறுதி நாளான இன்று மாலை சேத்தாண்டி வேடம் என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முகத்தில் வர்ணப் பொடிகளை பூசி வேடமிட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அதன் பின்னர், அவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கோவில் முன்பாக அமர்ந்தனர். அதனைத்தொடர்ந்து மண் கலயத்தில் மாடுகளின் கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சாதத்தை எடுத்து வந்து செருப்பு மற்றும் துடைப்பத்தில் தொட்டு ஒவ்வொருவராக மாற்றி மாற்றி தலையில் அடித்தும், கால்களால் தலையில் உதைத்தும், செருப்பு மாலை அணிவித்தும் வினோதமான முறையில் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சேற்றில் குதித்து ஒருவர் மீது ஒருவர் சேறு பூசிக் கொண்டனர். பின்னர், அவர்கள் கோவில் குளத்தில் நீராடி நேர்த்திக்கடனை முடித்தனர்.

இந்த விநோத நேர்த்திக் கடன் குறித்து பக்தர்கள் கூறுகையில், 

"இதுபோன்ற நேர்த்திக் கடனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செலுத்தி வருகிறோம். உடலில் சேறு பூசிக் கொள்வதால் கோடைக் காலத்தில் சரும மற்றும் உஷ்ண நோய்கள் ஏற்படாமல் இருக்கும். துடைப்பம் மற்றும் செருப்பால் அடி வாங்குவதன் மூலம் சகிப்புத் தன்மை பெருகி சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வழி ஏற்படும்" என்று தெரிவித்தனர். அதன் பின்னர் அம்மன் பூஞ்சோலை சென்றடைதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: