'டமார்’ சத்தத்திற்கு எண்ட் கார்டு பைக் ‘ரேஸர்ஸ்’ மற்றும் மைனர்களுக்கு செக் வைத்த டிராஃபிக் போலீஸ் ; கோவையில் 1,500 ஆல்டரேஷன் சைலன்சர்கள் அதிரடி பறிமுதல் - ரோடு ரோலரை ஏற்றி அழிக்க அதிரடி உத்தரவு !!!
கோவை மாநகரப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாகப் பொதுமக்களையும், நோயாளிகளையும் அச்சுறுத்தும் வகையில் காதைக் கிழிக்கும் ‘டமார்’ சத்தத்துடன் பறந்த பைக் ரேஸர்களின் 1,500-க்கும் மேற்பட்ட ஆல்டரேஷன் சைலன்சர்களை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்து உள்ளனர்.
கோவையின் முக்கியச் சாலைகளான அவினாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அதிநவீன இருசக்கர வாகனங்களின் சைலன்சர்களை மாற்றி, விதியை மீறி அதிக சத்தத்துடன் வண்டிகளை ஓட்டி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகப் போக்குவரத்துப் பிரிவுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதை அடுத்து, மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் ஒழுங்கு பிரிவினர் இணைந்து, கடந்த 90 நாட்களாக மாநகரின் முக்கியச் சந்திப்புகளில் ‘ஸ்பெஷல் டிரைவ்’ நடத்தி அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த ஆபரேஷனில் சிக்கிய, விதிகளுக்குப் புறம்பாகப் பொருத்தப்பட்டு இருந்த 1,500-க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் அனைத்தும் அவிழ்க்கப்பட்டு, கோவை பி.ஆர்.எஸ் (PRS) மைதானத்தில் மலை போலக் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
இந்த பிரம்மாண்ட பறிமுதல் உபகரணங்களை கோவை மாநகரக் காவல் துறை ஆணையர் நேரில் பார்வையிட்டு, போக்குவரத்துப் போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பாராட்டினார்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள இந்த சைலன்சர்கள் அனைத்தையும் ரோடு ரோலர் இயந்திரத்தை ஏற்றிப் பொதுமக்கள் முன்னிலையிலேயே முற்றிலுமாகத் தூள் தூளாக அழிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மெக்கானிக் ஷாப்களில் பைக்குகளை ஆல்டரேஷன் செய்து கொடுக்கும் நபர்கள் மீதும், லைசென்ஸ் இல்லாமல் பைக் ரேஸில் ஈடுபடும் மைனர் சிறுவர்களின் பெற்றோர்கள் மீதும் ‘கிரிமினல்’ வழக்குப் பாயும் என கமிஷனர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: