டைமிங்’ பிரச்சனை ; நடுரோட்டில் இரு தனியார் பேருந்துகள் ரகளை - “நீ ஆம்பளையா... நான் ஆம்பளையா?” என மோதிக்கொண்ட ஊழியர்களால் பயணிகள் அதிர்ச்சி !!!
கருமத்தம்பட்டியில் அரங்கேறிய அநாகரிக கூத்து – மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களால் மக்கள் அவதி !!!
கோவை, சூலூர் அருகே கருமத்தம்பட்டி கொச்சின் - சேலம் நெடுஞ்சாலையில், இரு தனியார் பேருந்து ஊழியர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட ‘டைமிங்’ பிரச்சினை காரணமாக நடுரோட்டிலேயே ‘நீயா நானா’ என மல்லுக்கட்டிய சம்பவம் கோவையின் புறநகர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் இருந்து புறப்பட்ட ஏஎம்எஸ் (AMS) மற்றும் டிடிஎஸ் (DTS) ஆகிய இரு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு இடையே வண்டியை இயக்குவதில் நேரப் பிரச்சினை வெடித்து உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த இருதரப்பும், பேருந்துகளைச் சாலையின் நடுவே குறுக்காக நிறுத்தி விட்டு, பயணிகளைப் பணையம் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ஊழியர்கள், “நீ ஆம்பளையா இருந்தா வாடா... நான் ஆம்பளதான் பாத்துக்கடா!” எனப் பொதுமக்களுக்கு முன்பாக அநாகரிகமான முறையில் கெட்ட வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுக் கொண்டது அங்கு இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
இந்த வட்டாரத்தில் தனியார் பேருந்துகள் தங்களின் ‘கலெக்ஷன்’ மற்றும் ‘டைமிங்’ லாபத்திற்காக, நடுரோட்டில் பேருந்துகளைச் சண்டைக்கோழிகள் போல நிறுத்தி மோதிக் கொள்வது தற்போது வாடிக்கையாகி விட்டது.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறமிருக்க, பேருந்துக்குள் இருக்கும் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சூலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் கருமத்தம்பட்டி சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீஸார் இணைந்து, சம்மந்தப்பட்ட பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கு இடையே, கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் சில பேருந்துகள் திட்டமிட்ட ‘ரூட்’டான கருமத்தம்பட்டிக்குள் வராமல், உயர் மட்ட மேம்பாலம் வழியாக நைசாக ‘எஸ்கேப்’ ஆகிவிடுவதாகப் பொதுமக்கள் தரப்பில் மற்றொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு உள்ளது.
பேருந்துகள் தங்களது ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாகப் பறப்பதால், கருமத்தம்பட்டி, சோமனூர், மங்கலம், செகுடந்தாளி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் தினசரி பொதுப் போக்குவரத்து கிடைக்காமல் மணிக்கணக்கில் தவித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: