வெள்ளி, 26 ஜூன், 2026

கோவையில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் : ஒரே நாளில் 312 கிலோ கஞ்சா அதிரடி அழிப்பு - ​23,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மெகா விழிப்புணர்வு பேரணி !!!

SHARE

 கோவையில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் : ஒரே நாளில் 312 கிலோ கஞ்சா அதிரடி அழிப்பு - ​23,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மெகா விழிப்புணர்வு பேரணி !!!

 சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டக் காவல் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் இன்று மாபெரும் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. போதைப்பொருள் இல்லாத மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்தோடு, குறிப்பாக மாணவர்கள் இடையேயும் இளைஞர்கள் இடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்கள் முன்னிலையில் மொத்தம் 337 போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

​இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்பதை உணர்ந்து, மாவட்டம் முழுவதிலும் உள்ள 251 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்புச் கருத்தரங்குகள், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 23,624 மாணவ - மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, ‘நோ டு ட்ரக்ஸ்’ (Say No to Drugs) என்று உறுதிமொழியாக ஏற்றனர். 

மேலும், உடற்தகுதியை வலியுறுத்தும் வகையில் 25 முக்கிய இடங்களில் ‘போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான்’ ஓட்டங்களும், 23 பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணிகளும் நடத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களை உடனடியாகப் போலீஸாருக்கு வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

​இந்த சர்வதேச தினத்தின் மிக முக்கிய மற்றும் அதிரடி நடவடிக்கையாக, கோவை மாவட்டத்தின் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் பதியப்பட்ட பல்வேறு என்.டி.பி.எஸ் (NDPS Cases) வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 312.45 கிலோ கிராம் எடை உள்ள கஞ்சா மூட்டைகள், நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பூர்வமாக முற்றிலுமாக தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 

கோவை மண்டல டி.ஐ.ஜி (DIG) மற்றும் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு கமிட்டி தலைவரின் நேரடி மேற்பார்வையில், அனைத்து சட்ட நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த கஞ்சா அழிப்பு ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையான குண்டாஸ் பாயும் என எச்சரித்து உள்ள மாவட்டக் காவல் துறை, ‘போதை இல்லாத பாதுகாப்பான கோவை’யை உருவாக்கப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: