ஜூன் 26-இல் தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் : வெளியானது அறிவிப்பு !!!
தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி மகப்பேறு மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழக மகளிர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் அமலாதேவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில்,
"மதுரை மாவட்டம் மேலூரிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.
இந்த இயற்கை மரணங்களை திட்டமிட்ட படுகொலையாக சித்தரித்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது அவர்களின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சிவகாசியில் இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், அதிக ரத்தம் உறைதல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார். இதனை மருத்துவர்களின் கவனக்குறைவு என்று கூறுவதை ஏற்க முடியாது.
மேலூரில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் இருந்தும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தில் பெண் மகப்பேறு மருத்துவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை சொத்துக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவசர உதவிக்கு போலீஸ், சட்ட நிபுணர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளச் சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.
பிரசவத்தின் போதும், சிகிச்சையின் போதும் நிகழும் மரணங்களை வைத்து பணம் பறிக்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
மரணம் ஏற்படும் பட்சத்தில், வீண் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக உடற்கூறாய்வு (Post-mortem) செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தத் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மகப்பேறு மருத்துவர்கள் வரும் ஜூன் 26-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர்.
அன்றைய தினம் வெளிநோயாளிகள் பிரிவு (OP) சிகிச்சையும் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு (IP) ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.
தமிழகம் முழுவதும் சுமார் 4,500 மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தப் போராட்டம் அடுத்த கட்டமாக தீவிரமடையும்" என டாக்டர் அமலாதேவி தெரிவித்தார்.

0 கருத்துகள்: