திங்கள், 22 ஜூன், 2026

த.வெ.க பெண் எம்.எல்.ஏ குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த முதலமைச்சர் விஜய் !!!

SHARE

 த.வெ.க பெண் எம்.எல்.ஏ குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த முதலமைச்சர் விஜய் !!!

திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவியின் குழந்தைக்கு 'தமிழ் வெற்றிக் கொண்டான்' என முதலமைச்சர் விஜய் பெயர் சூட்டினார்.

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து முதல்வரின் பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்த முதல்வர் விஜய் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வரின் பெற்றோர்களான ஷோபா சந்திரசேகர் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் தங்களின் மகனை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்றப் பணிகளை முடித்து விட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து இல்லத்திற்கு புறப்பட்ட முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தனது குழந்தையுடன் சென்றார். அப்போது, தனது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு முதல்வரிடம் பல்லவி கேட்டுக் கொண்டார். குழந்தையை கையில் வாங்கிய முதல்வர் விஜய், குழந்தையை உச்சி முகர்ந்து 'தமிழ் வெற்றி கொண்டான்' என்று பெயர் சூட்டினார்.

இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி கூறும்போது: 

"எனது குழந்தைக்கு தமிழக முதல்வர் விஜய் ‘தமிழ் வெற்றி கொண்டான்’ என்று பெயர் சூட்டி உள்ளார். முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்து இருந்தேன். அப்போது அவரது வாயால் ‘தமிழ் வெற்றி கொண்டான்’ என்ற பெயர் கூறப்பட்டது" என்றார்.

அனைத்து நிகழ்ச்சிக்கும் குழந்தை அழைத்து வருகின்றீர்களே ? என்ற கேள்விக்கு பதில் அளித்த பல்லவி, "நம்மை நம்பி மக்கள் வாக்களித்து உள்ளனர். எனவே, குழந்தையுடன் சட்டமன்றத்திற்கு வருகிறேன்" என்றார்.

மேலும் பேசிய அவர், "ஜனநாயகம் திரைப்படத்தில் 'தளபதி விஜய் வெற்றி கொண்டான்' என பெயர் இருப்பதைப் போல ‘தமிழ் வெற்றி கொண்டான்’ என தனது குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இனி என்னுடைய குழந்தையை TVK (தமிழ் வெற்றி கொண்டான்) என்றே கூப்பிடுவோம். என்னுடைய குழந்தைக்கு முதல்வர் பெயர் சூட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு இன்று நனவாகி உள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: