கோவை, மருதமலை புறக்காவல் நிலைய போர்டை மறைத்த த.வெ.க பேனர் அதிரடி அகற்றம்: சோசியல் மீடியா எதிரொலியால் காவல்துறை நடவடிக்கை !!!
வைரல் வீடியோக்களால் எழுந்த கடும் விவாதம் – விவகாரம் பூதாகரமானதால் ‘ஸ்பாட்’டில் ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்!
கோவை, மருதமலை அடிவாரம் பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்து உள்ள புறக்காவல் நிலையத்தின் அதிகாரப்பூர்வ பெயர்ப் பலகையை மறைத்து வைக்கப்பட்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பேனர், சமூக வலைதளங்களில் சர்ச்சை எதிரொலியால் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக, பொதுமக்களின் பாதுகாப்பு மையமான இந்த அவுட்-போஸ்ட் பெயர்ப் பலகையை முற்றிலும் மறைத்தபடி, த.வெ.க நிர்வாகிகள் சிலர் தங்களது பிரம்மாண்ட அரசியல் பேனரைக் கட்டி இருந்தனர்.
சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் ஒரு துறையின் போர்டே தெரியாத அளவுக்கு, பேனர் வைக்கப்பட்டு இருந்த இந்த அசாத்திய அத்துமீறல் காட்சிகளைப் பொதுமக்கள் சிலர் வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து இணையத்தில் தட்டிவிட்டனர்.
இந்த பதிவுகள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கண்டனக் குரல்களுடன் பேசுபொருளானது ‘சட்டம் ஒழுங்குக்கே சவாலா ?’ என்ற பாணியில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியதால், இந்த விவகாரம் மாவட்ட உயர் அதிகாரிகள் வரை சென்று பூதாகரமானது.
இதை அடுத்து, உடனடியாக போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களுக்கு இடையூறாகவும் விதிமுறைகளை மீறியும் வைக்கப்பட்டு இருந்த அந்தப் பிரம்மாண்ட த.வெ.க பேனரை உடனடியாக அகற்றினர்.

0 கருத்துகள்: