கோவையில் தியேட்டரில் இளம்பெண்ணுக்குப் பின் சீட்டில் அமர்ந்து சில்மிஷம் செய்த வாலிபர்; அலறல் சத்தத்தைக் கேட்டுப் பொதுமக்கள் கொடுத்த ‘தர்ம அடி’ - வாலிபரை கைது செய்து காவல்துறை விசாரணை !!!
கோவை, காளப்பட்டி அருகே உள்ள அலாவுதீன் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், கடந்த 15-ந் தேதி மதியம் 1.45 மணி அளவில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கிற்குத் தனது உறவினரான 25 வயது வாலிபருடன் படம் பார்க்கச் சென்று உள்ளார்.
படம் ஓடிக்கொண்டு இருந்த போது, அந்த பெண்ணின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த வாலிபர் ஒருவர், இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு இளம்பெண்ணின் தோள் மற்றும் பின்புறத்தில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே இருக்கையை விட்டு எழுந்து சத்தம் போட்டார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தியேட்டரில் இருந்த பொதுமக்கள் விளக்குகளைப் போட்டு, சில்மிஷம் செய்த வாலிபரை வளைத்துப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் கோவை கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த சஞ்சய் (வயது 22) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, சஞ்சயை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

0 கருத்துகள்: