ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர்; நூதன தண்டனை கொடுத்த டி.ஐ.ஜி !!!
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலருக்கு நெல்லை டி.ஐ.ஜி கொடுத்த நூதன தண்டனை அம்மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்பட்டுத்தி உள்ளது.
தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதனை பின்பற்றி நடக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை பலரும் முறையாக பின்பற்றுவது கிடையாது.
இந்த நிலையில், காவல்துறையினர் ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு தொடர்ந்து கடும் அபராதத்தையும் விதித்து வருகிறது. இந்தச் சூழலில் நெல்லை மாவட்டதில் பணி புரியும் தலைமை காவலர் வெங்கடேஷ் என்பவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். இதனை பார்த்த நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு காவலர் வெங்கடேஷை தனது அலுவலகத்திற்கு வரும்படி அழைத்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து காவலர் வெங்கடேஷ், டி.ஐ.ஜி-யை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்று உள்ளார். அப்போது தனக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் போகிறாரோ? என்ற அச்சத்தில் டி.ஐ.ஜி யை சந்தித்த தலைமை காவலருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.
காவலரின் குடும்பம், குழந்தைகள் தொடர்பாக விசாரித்த டி.ஐ.ஜி, ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என வினவி உள்ளார். மேலும், டி.ஐ.ஜி அலுவலகம் எதிரே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலை காய பிரிவிற்கு சென்று, அங்கு ஹெல்மெட் அணியாமல் சென்ற நபர்கள் விபத்துக்கு உள்ளாகி என்ன கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை பார்த்து விட்டு வரும்படி அறிவுறுத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து வெங்கடேஷ் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலை காயப் பிரிவுக்கு சென்று அங்கு சிகிச்சையில் உள்ளவர்களை பார்த்து விசாரித்து உள்ளார். ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியதால் பல குடும்பங்கள் அனாதையாகவும், நிர்கதியாகவும் நின்று வருவதை கண்டு வெங்கடேஷ் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
இந்நிலையில், காவல்துறை உயர் அதிகாரி ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக காவலருக்கு தண்டனை வழங்கி இருக்கலாம். ஆனால் தனக்கு கீழ் பணியாற்றுபவருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றால் என்ன நடக்கும் என்பதை உணர வைப்பதற்கு மருத்துவமனை அனுப்பி வைத்தது காவலர் வெங்கடேஷ்க்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
எனவே இனி ஒரு காலமும் ஹெல்மெட் போடாமல் வாகனம் இயக்க மாட்டேன் என மனம் உருகி வெங்கடேஷ் பேசிய வீடியோவை காவல்துறை வெளியிட்டு உள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: