செவ்வாய், 30 ஜூன், 2026

இது வெறும் டிரைலர் தான்...த.வெ.க அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆவேசம் !!!

SHARE

 இது வெறும் டிரைலர் தான்...த.வெ.க அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆவேசம் !!!

தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவா தி.மு.க போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது ? என்று கேள்வி எழுப்பிய தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க வின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இன்று திட்டமிடப்பட்டு இருந்தது. போராட்டத்திற்காக மேடை அமைத்த போது போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி காவல் துறையினர் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டு தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, த.வெ.க அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க மாணவர் அணி செயலாளர் வீரமணி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்தபடி த.வெ.க அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, 

"சென்னையில் தி.மு.க சார்பில் ஒரே இடமாக எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இதுகுறித்து முறையாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் அங்கே போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவா தி.மு.க போராட்ட களத்தில் ஈடுபட்டு வருகிறது? நியாயமான கோரிக்கைகளை வற்புறுத்த, கேளா காதுகளாக இருக்கும் அரசாங்கத்தின் செவிகளுக்கு சென்று சேர்வதற்கு கவனத்தை ஈர்ப்பதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இது வெறும் டிரைலர் தான். ஒரு இடத்தில் நடைபெற இருந்த போராட்டத்தை மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபடுவது எங்கள் இயக்கத்திற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். அடிக்க அடிக்க எழும் பந்தாக, அறுக்க அறுக்க மணக்கும் சந்தனமாக, தீட்ட தீட்ட ஜொலிக்கும் வைரமாக தி.மு.க இருக்கும். நெருக்கடியையே சிரித்த முகத்துடன் 24 வயதில் சந்தித்தவர் எங்கள் தலைவர் மு.க ஸ்டாலின். அவரது படை சிறைக்கு அஞ்சாது.

கொடும் சிறைச்சாலை என்றாலும் சரி அல்லது காவல்துறையின் தடியடி பிரயோகமாக இருந்தாலும் சரி சிரித்த முகத்துடன் சிறைச்செல்ல தயார். தமிழக அரசு எங்களை எப்படி அணுகுகிறதோ அதேபோலான அணுகுமுறை தான் எங்களிடமும் இருக்கும். இந்தப் போராட்டம் தொடரும் தொடரும் தொடரும்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: