தாயைப் பிரிந்த குட்டி யானை ; சிறுமுகை மறுவாழ்வு மையத்தில் இருந்து கோழிக்கமுத்திக்கு இடமாற்றம் - வனத்துறையினர் அதிகாலையில் அதிரடி ஆபரேஷன் !!!
தாயை பிரிந்த 3 வயது குட்டிக்கு ஏ.டி.ஆர் முகாமில் புதிய வாழ்க்கை – சூரிய வெப்பத்தைத் தவிர்க்க ‘டார்க் ஹவர்ஸ்’ பயணம் !!!
கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் கடந்த இரண்டு மாதங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த, தாயைப் பிரிந்த 3 வயது குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் ஆனைமலை கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு இன்று அதிகாலை அதிரடியாக இடமாற்றம் (Relocation Operation) செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி சிறுமுகை லிங்காபுரம் சோதனைச்சாவடி அருகே தனியாகத் தவித்த இந்தக் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். தொடர்ந்து பல நாட்களாகப் போராடி, தாய் மற்றும் காட்டு யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவை துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியில் முடிந்தன.
இதை அடுத்து, குட்டியின் ஹெல்த் கண்டிஷனைக் கருத்தில் கொண்டு, பெத்திக்குட்டை மோதூர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து, ஆனைமலை முகாம் பாகன்களின் உதவியுடன் அதற்குச் சிறப்புப் பயிற்சிகளும், நடைப்பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தமிழக அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவின்படி, கோவை மண்டல உயர் வன அதிகாரிகளின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், குட்டி யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு (ATR) மாற்ற ஒருத்தர விடப்பட்டது. இதற்காக, இன்று அதிகாலை 5 மணி அளவில் மாவட்ட வன அலுவலர் முன்னிலையில், அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பிரத்யேக வாகனத்தில் குட்டி யானை பத்திரமாக ஏற்றப்பட்டது.
கோடைக்கால அதிகாலை நேரக் குளுமையைப் பயன்படுத்தி, நேரடி சூரிய ஒளி மற்றும் பயணக் களைப்பால் குட்டிக்கு ஏற்படும் ‘ஸ்ட்ரெஸ்’ (Travel Stress) அளவைக் குறைப்பதற்காகவே இந்த அதிகாலை நேரம் கொண்டு செல்லப்பட்டதாக வனச்சரகர் ராஜகுரு தெரிவித்து உள்ளார்.
வன கால்நடை மருத்துவக் குழுவினர் மற்றும் சிறப்புப் பணியாளர்களின் தீவிரக் கண்காணிப்பில், காலை 9 மணிக்குள் பாதுகாப்பாகக் கோழிக்கமுத்தி முகாம் போய்ச் சேரும் வகையில் இந்த ஆபரேஷன் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக அரங்கேறி உள்ளது.
அங்கு அனுபவம் வாய்ந்த மாவூத்துகள் (Mahouts) மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் இக்குட்டி யானைக்கு இனி தொடர் மறுவாழ்வுச் சிகிச்சைகள் வழங்கப்படும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.

0 கருத்துகள்: