வியாழன், 25 ஜூன், 2026

கோவைப் புதூரில் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் : ‘அன்னூர் அதிர்ச்சி அடங்குவதற்குள் மீண்டும் கொடூரம்’ – த.வெ.க அரசை ‘டோஸ்’ விட்ட வானதி சீனிவாசன் !!!

SHARE

 கோவைப் புதூரில் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் : ‘அன்னூர் அதிர்ச்சி அடங்குவதற்குள் மீண்டும் கொடூரம்’ – த.வெ.க அரசை ‘டோஸ்’ விட்ட வானதி சீனிவாசன் !!!

'சிங்கப் பெண் படை உறங்கி விட்டதா ?' என எம்.எல்.ஏ அறிக்கை; முட்புதரில் தடயங்களைச் சேகரித்த போலீசார் !!!

கோவையை அடுத்து உள்ள கோவைப்புதூர் மேற்கு பைபாஸ் ரோட்டின் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத முட்புதர் நிறைந்த பகுதியில், பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, அரை நிர்வாண நிலையில் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அதைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த பெண் யார், அங்கு எதற்கு வந்தார், அவர் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் கிடந்த இடத்தில் தடய அறவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறும்போது:

கோவை புதூர் பகுதியில் ஆள் நடமாட்டமில்லா இடத்தில் இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக வெளியாகி உள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 

கடந்த வாரம் அன்னூர் சாலையில் சாக்கு மூட்டையில் இளம் பெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், மீண்டும் கோவையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து இருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பெண்களின் பெருமையைப் பாடிய தமிழகத்தில், இன்று எங்கெங்கு காணினும் குற்றங்களடா என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் மீதான கொடுமைகள் அதிகரித்து இருப்பது த.வெ.க ஆட்சியின் அவல நிலையின் உச்சம்.

இப்போது தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறோம், சட்டம் - ஒழுங்கை சரி செய்ய நேரம் வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் இதற்கும் காரணம் கூறக் கூடாது.

சட்டசபையில் விமர்சனங்களுக்கு சினிமா வசனம் போல ஆவேசமாக பதிலளித்தவர், பெண்கள் அனுதினமும் அனுபவிக்கும், அச்சத்திற்கும் கொடுமைகளுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார் ?

பெண்களின் பாதுகாப்புக்காக பெருமையாக அறிவிக்கப்பட்ட சிங்கப் பெண் படை உறங்கிவிட்டதா, ?அல்லது வழக்கம் போல பத்தோடு பதினொன்றாக செயல்படத் தொடங்கிவிட்டதா ? குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: