புதன், 24 ஜூன், 2026

தனியார் பள்ளி கல்வி கட்டண வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு !!!

SHARE

 தனியார் பள்ளி கல்வி கட்டண வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு !!!

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்து உள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதையும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்திலும் அச்சிட்டு வெளியிடவதையும் கட்டாயமாக்கும்படி தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, ஜூன் 5 ஆம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கையையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தகவல் உரிமைச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. சி.பி.எஸ்.இ போன்ற மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த முடியாது என வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில், தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் கல்வி கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால், சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டபாணி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

தனியார் பள்ளிகளின் கட்டண விவரத்தை பள்ளிகள் வெளியிட வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: