பேனர்கள், போஸ்டர்களை அகற்றுவதில் பாகுபாடு காட்டுவதா? மாமன்ற கூட்டத்தில் கொந்தளித்த மேயர் பிரியா !!!
பேனர்கள், போஸ்டர்களை வைப்பதிலும், அவற்றை அகற்றுவதிலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பாகுபாடு காட்டக் கூடாது என சென்னை மேயர் பிரியா உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் 3 மாதங்களுக்கு பிறகு, இன்று ரிப்பன் மாளிகை நடைபெற்றது. மேயர் பிரியா தலைமையிலும், சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் சமீரன் முன்னிலையிலும் இந்த மாமன்ற கூட்டம் தொடங்கியது.
மாநகராட்சி மாமன்ற அவையில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு எதிரே முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புகைப்படம் இருந்தது. இந்தக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 6-வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "த.வெ.க அரசு பொறுப்பேற்ற பின்னர் புகைப்படங்கள், பேனர், சுவரொட்டிகள் அகற்றுவதிலும், வைப்பதிலும் மாநகராட்சி அதிகாரிகள் பாகுபாடு காட்டுகிறார்கள். பிறந்தநாள் போன்ற நல்ல நாட்களில் நாங்கள் பேனர்களை வைக்கிறோம். ஆனால், அதனை உடனடியாக வந்து மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுகிறார்கள். ஆளுங்கட்சியின் பேனர்களாக இருந்தால் அதை விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, "கடந்த காலங்களில் திமுக அரசால் திறக்கப்பட்ட கட்டடங்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் உள்ளன. அதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றக் கூடாது.
தற்போதை அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்களில் வேண்டுமானால், அவர்களின் தலைவர்களின் புகைப்படத்தை வைத்து கொள்ளலாம்.
அதே போல, சென்னை மாநகராட்சி பணியில் உள்ள அதிகாரிகள் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் செயல்பட வேண்டும்.
ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அதிகாரிகள் பேதம் பார்க்கக் கூடாது. மக்கள் பணிகள் தான் முக்கியம். அதற்கு ஏற்றவாறு அதிகாரிகள் அதிகாரிகளாவும், மாமன்ற உறுப்பினர் மாமன்ற உறுப்பினராகவும் செயல்படுங்கள்" என மேயர் பிரியா அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பேனர்கள், போஸ்டர்கள் சுவரொட்டிகள வைக்கும் விவகாரத்திலும், அவற்றை அகற்றும் விஷயத்திலும் மாநகராட்சி அதிகாரிகள் பாகுபாடு காட்டக் கூடாது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தங்களில் கடந்த காலங்களில் தமிழக அரசு செய்த சாதனைகள் இடம் பெற்று இருந்தது.
இந்த முறையும் அரசின் சாதனைகள் தான் இடம் பெற வேண்டும். ஆனால், கட்சி சார்ந்த எந்த விளம்பரங்களும் இடம்பெறக் கூடாது. இதனை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்" என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: