வியாழன், 11 ஜூன், 2026

கவின் கொலை வழக்கு; பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ. சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் !!!

SHARE

 கவின் கொலை வழக்கு; பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ. சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் !!!

திருநெல்வேலி மென்பொறியாளர் கவின் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்ய காவல் உதவி ஆய்வாளரும், கவின் காதலியின் தந்தையுமான சரவணனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் கடந்த ஆண்டு ஆவணக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கவின் காதலியின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்தவருமான சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சரவணன், திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.

இதை அடுத்து, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சரவணனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது; ஜாமீன் வழங்கப்படும் பட்சத்தில் வழக்கு விசாரணையானது பாதிக்க நேரிடும்" என்று கூறி ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த், "இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்; சாட்சியங்களை கலைக்க மாட்டோம்; நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயாராக இருக்கிறோம்" என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரர் இந்த வழக்கின் சாட்சியங்களைக் கலைக்க முயற்சிக்கக் கூடாது. மறு உத்தரவு வரும் வரை மனுதாரர், கோயம்புத்தூரிலேயே தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும். ஒரு லட்சம் மதிப்பில் பிணை பத்திரம் வழங்க வேண்டும்" பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அதைத் தொடர்ந்து சரவணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளார்.

இதன் இடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் எதிராக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், திருநெல்வேலி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 900 பக்கங்களுக்கும் அதிகமான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: