விமர்சனம் செய்த தி.மு.க வுக்கு போஸ்டர் வெளியிட்டு பதிலடி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி !!!
த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்தது ஏன் ? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்த கருத்தை விமர்சித்து முரசொலி வெளியிட்டு உள்ள கட்டுரைக்கு அக் கட்சி போஸ்டர் மூலம் இன்று பதிலடி கொடுத்து உள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளை கைப்பற்றிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இதை அடுத்து, தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைத்தது என்று தி.மு.க தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், த.வெ.க ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தது ஏன் ? என்ற கேள்விக்கு அக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், "தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே த.வெ.க வுக்கு ஆதரவு அளித்தோம்; இது எங்கள் கட்சியின் முடிவு" என்று விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த சூழ்நிலையில், "புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்" என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில், "த.வெ.க வுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுத்து இருக்கிறோம். தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க கூட்டணி ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்து இருக்கிறோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதை அடுத்து, பெ.சண்முத்தின் கட்டுரையை விமர்சித்து, திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான "முரசொலி" கட்டுரை ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளது. அதில், "குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடும், தேர்தல் வந்து விடும் என்பதெல்லாம் உலகப் பம்மாத்து. சண்முகத்தின் உண்மையான நோக்கம், திராவிடக் கட்சி இல்லாத ஆட்சி அமைய ஆதரவு என்பது தான். அதனால் தான் .த.வெ.க ஆட்சியை விழுந்தடித்து போய் ஆதரித்து உள்ளோம் என்பதை சண்முகமே கக்கி விட்டார்.
144 உறுப்பினர்கள் ஆதரவுடன் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்து விட்டார். இதில், அ.தி.மு.க வை சேர்ந்த 25 உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. அ.தி.மு.க தயவுடன் அமைந்து உள்ள ஆட்சியை ஆதரிப்பது சண்முகத்திற்கு கேவலமாக தெரியவில்லையா? சி.வி.சண்முகமும் பெ.சண்முகமும் ஒரே நேர்க் கோட்டில் தான் நிற்கிறீர்கள். கொள்கைப்புடலங்காய் ஏதுமில்லை" என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முரசொலியின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், "பா.ஜ.க+தி.மு.க+அ.தி.மு.க எனும் கொள்கை புடலங்காய் சி.பி.ஐ(எம்)க்கு எப்போதும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தி.மு.க வெளியே வேறு, உள்ளே வேறு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.எம் கட்சியின் இந்த பதிவு, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

0 கருத்துகள்: