வெள்ளி, 19 ஜூன், 2026

கொளத்தூர் குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா; சட்டப்பேரவையில் த.வெ.க - தி.மு.க இடையே கடும் வாக்குவாதம் !!!

SHARE

 கொளத்தூர் குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா; சட்டப்பேரவையில் த.வெ.க - தி.மு.க இடையே கடும் வாக்குவாதம் !!!

கொளத்தூரில் என்ன நடந்தது என்று தெரியும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதால் தி.மு.க வினருக்கும், த.வெ.க வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, மேகதாது அணைக்கு எதிரான அரசின் சிறப்பு தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

அதனைத் தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரத்தில் அவையின் மாண்பு மீறப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”மரபுகள் மீறப்படவில்லை, நாட்டுப்பண் தேசிய கீதம் தமிழ்நாடு மக்களால் என்றைக்கும் புறக்கணிக்கப்பட்டது கிடையாது. நமது தலைவர்கள் அண்ணா, காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா முதற்கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் தேசிய கீதத்திற்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் நமது மரியாதையை கொடுத்து இருக்கிறோம்.

தேசிய கீதமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? என்று வரும் போது, முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தை இன்றைய ஆளுநர் முன்பு பாட வைத்தவர் எங்களது முதலமைச்சர். தமிழ்நாட்டின் சுயமரியாதையை காப்பாற்ற உறுதியுடன் நின்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அதே சபையில், அதே ஆளுநர் முன் பாடப்பட்டது. சபை மரபை நாங்கள் மீறவில்லை, மாற்றாதீர்கள். அறிஞர் அண்ணாவின் தி.மு.க கொள்கைகளை, அரசியல் கருத்துக்களை நாங்கள் உறுதியாக பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். அதேபோல், மாநில கொள்கைகளில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் புதிய ஆளுநரின் அழுத்தத்திற்கு இந்த அரசு பணிந்து விட்டது என குற்றம்சாட்டினார். 

அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”நாங்கள் எப்போதும், எந்த அழுத்தத்திற்கும் பணிந்தது கிடையாது. உங்களது பழைய வரலாற்றை பேசினால் அவையின் மரபு மீறப்படும், அதனால் நாங்கள் அதை பேசவில்லை. மாநில சுயாட்சிகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்றத்தில் அரசியலை உருவாக்காதீர்கள். நாங்கள் உறுதியாகவும், உண்மையாகவும் இருப்பதால் தான் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது” என பதில் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின், ஊடக கவர்ச்சியால் த.வெ.க ஆட்சிக்கு வந்து விட்டது என குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஊடகங்கள் மொத்தமும் தி.மு.க விற்கு வக்காளத்து வாங்கியதே தவிர, நாங்கள் ஊடகத்தை கையில் வைத்துக் கொண்டு வெற்றி பெறவில்லை” என கூறினார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”அவைக்கு தவறான தகவல்களை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தருகிறார். தி.மு.க ஆட்சியில் கடந்த மே மாதம் தூத்துக்குடியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியின் வழக்கை 36 மணி நேரமாக எடுத்து விசாரிக்கவில்லை.

இதுகுறித்து அப்போதைய முதலமைச்சர் வாய் திறக்கவே இல்லை. நீங்கள் பாலியல் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுத்தது போல் பேசுவது சரியா ? ஆனால் நாங்கள் வந்த 30 நாட்களில் எங்களது முதலமைச்சர் அதற்கான நடவடிக்கையை எடுத்தார். என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும் என்பதை நீங்கள் முதலமைச்சருக்கு சொல்லித் தர தேவையில்லை, அவருக்கு நன்றாக தெரியும். நாங்கள் இந்த அவையின் மாண்பை கடைபிடித்து பேசி வருகிறோம், கொளத்தூரில் என்ன நடந்தது என்று தெரியும்” என பேசினார்.

இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியவுடன் தி.மு.க வினருக்கும், த.வெ.க வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தி, இருக்கையில் அமர வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் அவர் (முதலமைச்சர் விஜய்) பேசுகின்ற இடமெல்லாம் உங்கள் ஊழலை பற்றி, ஊர் அறிய மக்களிடம் கொண்டு சென்றதால் தான் த.வெ.க அரசிற்கு மக்கள் வாக்களித்து உள்ளனர்” என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: