வெள்ளி, 19 ஜூன், 2026

தமிழ்நாடு அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொண்ட சேலம் விவசாயிகள் !!!

SHARE

 தமிழ்நாடு அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொண்ட சேலம் விவசாயிகள் !!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து, விவசாயிகள் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், இன்று மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வருகை தந்தனர். அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திடீரென கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மாநில அளவில் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய முன்வர வேண்டும், பகுதி பகுதியாக ரத்து என்று அறிவித்து உள்ளது விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி, 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி வெளியேறினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முழங்காலிட்டு சாட்டையால் அடித்துக் கொண்டு தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சேலம் மாவட்ட செயலாளர் வேலன் கூறுகையில், 

"அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வஞ்சனை செய்கிறது. ரூபாய் 75 ஆயிரம் வரையிலான கடன் மட்டும் முழுமையாக தள்ளுபடி என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு ஏற்புடையதல்ல.

தேர்தல் காலத்தில் விஜய் கூறியபடி கடன் தள்ளுபடியை முழுமையாக வழங்க வேண்டும். எங்களது இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம், மேலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்து உள்ளோம். மாற்றம் வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்ததற்கு கிடைத்த பரிசு தான் இந்த விவசாயிகள் புறக்கணிப்பு. எங்களின் நிலையை எண்ணி நாங்களே எங்களை சாட்டையால் அடித்துக் கொள்கிறோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை” என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: