திங்கள், 22 ஜூன், 2026

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது - தமிழக அரசு !!!

SHARE

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது - தமிழக அரசு !!!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை வெடித்தது. அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி, ராம ரவிக்குமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து பலரும் மனுக்களைத் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை அமர்வின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். அதை அடுத்து பல்வேறு விசாரணைகளில், பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதிலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே வழக்கு முடித்து வைக்கப்படும் எனவும், இந்த நாட்டில் திருப்பரங்குன்றம் வழக்கு மட்டும் தான் உள்ளதா ? நீதிமன்றத்திற்கு வேறு வழக்கே இல்லையா ? என்றும் நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுகளை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தரப்பில், “உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக” தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “இதை ஏன் ?நிலுவையிலேயே வைத்து இருக்க விரும்புகிறீர்கள் ? உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கு என்ன சிக்கல் ? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பில், “அது அரசின் நோக்கம் அல்ல. 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதை தொடர்வதா ? புதிய முறையை தொடர்வதா ? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், “ராம ரவிக்குமார் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பிலும், தர்கா தரப்பிலும், அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.


தொடர்ந்து, “மத நல்லிணக்கம் முக்கியமானது” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், “அங்கு வாழும் மக்களின் அமைதி முக்கியமானது. அவர்கள் கள நிலவரத்தை முழுமையாக அறிவார்கள். ஆகவே, இரு தரப்பிலும் அமைதியான முறையில் என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுக்க முயற்சிக்கலாம்” என தெரிவித்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: