புதன், 24 ஜூன், 2026

த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு வெட்கமில்லை என்பதா ? ஆ.ராசா பேச்சுக்கு வி.சி.க நிர்வாகி கண்டனம் !!!

SHARE

 த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு வெட்கமில்லை என்பதா ? ஆ.ராசா பேச்சுக்கு வி.சி.க நிர்வாகி கண்டனம் !!!

த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு வெட்கமில்லை என விமர்சித்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு வி.சிக நிர்வாகி எழில் கரோலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள பதிவில், '2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வென்றதால் தன்னிச்சையாக ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி 'குடியரசுத் தலைவர் ஆட்சி' என்கிற பெயரில் தமிழ்நாட்டில் மறைமுக பா.ஜ.க ஆட்சி' வந்து விடக் கூடாதென்ற தொலைநோக்குப் பார்வையில் இடதுசாரித் தலைவர்களுடன் கலந்துப்பேசி த.வெ.க ஆட்சியமைக்க ஆதரவளிப்பது என முடிவெடுத்தார் எழுச்சித் தமிழர் தலைவர் அவர்கள்.

தி.மு.க வுடன் கூட்டணி வைத்து இரண்டு எம்.எல்.ஏ-க்களை பெற்றோம் என மரியாதைக்காக தி.மு.க தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை சந்தித்து தகவலை தெரிவித்து விட்டுத் தான் த.வெ.க-விடம் ஆதரவு கடிதத்தை கொடுத்தோம். அதற்காக, தி.மு.க விடம் அனுமதி வாங்கி விட்டு ஆதரவளித்தோம் எனச் சொல்வதையும் ஏற்க முடியாது. பின்னர் சிறுத்தைகளின் விருப்பத்தையும் த.வெ.க வின் கோரிக்கையையும் ஏற்று த.வெ.க அமைச்சரவையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது. த.வெ.க அமைச்சரவையில் பங்கேற்ற நாள்முதல் தி.மு.க வினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ச்சியான வன்ம பரப்புரை திட்டமிட்டே பரப்புகிறார்கள். அதற்கு வன்மையான கண்டனங்களையும் எச்சரிக்கையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள், த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற்ற நாளன்றே, கொச்சையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு அண்ணன் ஸ்டாலினின் கண்டனத்தை ஏற்று சிறுத்தைகள் மிகுந்த கண்ணியத்துடன் கடந்து சென்றோம். தற்போது மீண்டும் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்று உள்ள கட்சிகளை அவமதிக்கும் விதமாக பேசி இருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு தொடர்பாக ஜூன் 23-ம் தேதி சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் "தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சி அமைத்து உள்ளீர்கள். அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களுக்கும் வெட்கமில்லை, அமைச்சரானவர்களுக்கும் வெட்கமில்லை!" எனக் கேட்கிறார். இத்தகைய காட்டமான விமர்சனங்களை முன் வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ?

அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு பணிவன்புடன் சில கேள்விகளை முன்வைக்க விழைகிறேன். 40 நாட்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வின் ஆசியுடன் பரம எதிரி அ.தி.மு.க வுடன் இணைந்து ஆட்சி அமைக்க தி.மு.க முயன்றதே. அப்போது உங்களுக்கு வெட்கமில்லையா? விஜய் முதல்வராகவிடாமல் தடுக்க ஒவ்வொரு கட்சியின் கதவுகளையும் நள்ளிரவில் தட்டினாரே உதயநிதி. மக்கள் தீர்ப்பை திருட முயன்ற போது உங்களுக்கு வெட்கமில்லையா?

வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தது தி.மு.க, அப்போது வெட்கமில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை வி.சி.க தயவில் பெற்றுக் கொண்டு அதிகாரத்தில் பங்கு தர மறுத்தீர்களே. அப்போது வெட்கமாக இல்லையா? 2026 தேர்தல் சமயத்தில் விசிக வேட்பாளர்களிடம் உங்கள் முன்னாள் அமைச்சர்கள் சாதிய துவேசத்தை வெளிப்படுத்தி, உள்ளடி வேலை செய்து தோற்கடித்தார்களே. அந்த செய்திக் கேட்டு நீங்கள் வெட்கப்படவில்லையா?

விளிம்பு நிலை மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்து, 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' முழக்கத்தை அரசியலை களத்தில் ஏந்திய எங்கள் தலைவர், சமூகநீதி வழி ஆட்சி நடத்த விரும்பும் விஜய்க்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கிறார். இதைக்கண்டு வயிற்றெரிச்சல் அடைகிறீர்கள். இதற்குத்தான் உள்ளபடியே நீங்கள் வெட்கப்பட வேண்டும்.


வாய்துடுக்கான பேச்சுகளும் கூட்டணிக் கட்சிகளை பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகியதும் தான் தி.மு.க வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்து இருக்கிறது என்பதையும் உங்களுக்கு நினைவுகூற விரும்புகிறேன். தோல்வியின் மனவேதனையில் பிதற்றிக் கொண்டு இருக்காமல் இனியாவது ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!' என தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: